31 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – ஆண்டர்சன்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட பாரம்பரிய டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவிற்கு மிகுவும் ராசியானதாகும்.

1988-ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. அதன்பின் அந்த அணி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தோல்வியடைந்ததே கிடையாது.


1989 முதல் ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் 28 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

இங்கிலாந்து 1986-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. அதன்பின் 1998 மற்றும் 2010-ல் இரண்டு முறை டிரா செய்துள்ளது. 31 வருடங்களாக வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து உள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் கடந்த 31 வருடங்களாக வெற்றி பெற முடியாததற்கு முடிவு கட்ட வேண்டும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில் ‘‘பிரிஸ்பேன் கப்பா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா கடந்த 1988-ல் இருந்து தோல்விகளை சந்தித்தது கிடையாது. வெற்றி அல்லது டிரா என்ற முடிவுகளை மட்டுமே ஆஸ்திரேலியா கண்டுள்ளது. இந்த தொடர் எப்படி செல்லப்போகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அதிக அளவில் ஸ்விங் ஆகாது. அதனால் விக்கெட் இழப்பிற்கு மாற்று வழியைத்தேட வேண்டியது எனக்கு முக்கியமானது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளம் போன்றுதான் ஆஸ்திரேலிய ஆடுகளம் இருக்கும். இங்கிலாந்தை விட கூடுதல் பவுன்ஸ் இருக்கும். புற்கள் சற்று குறைவாக இருந்தாலும், அதிக அளவில் வித்தியாசம் இருக்காது’’ என்றார்.