சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி சபை தொடர்பில் பெரிய பள்ளிவாசலின் முக்கிய தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர், யூ.கே.காலீத்தீன்

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் சார்ந்த செயற்பாடுகளை எவரும் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதில்லை என சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அவசர கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மரைக்காயர்கள், சிவில் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு;

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக செவ்வாய்க்கிழமை (24) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது எனவும் அதற்காக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்து, தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.

பிரதமர்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கும், சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்குமிடையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றோம்.

இத்தீர்மானமானது பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

இவை தொடர்பாக மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்புடனும் நடாத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில் மீண்டுமொரு குழு நியமனம் என்பது இவ்வூர் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமென கருதுகின்றோம்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியோகமான எல்லைப்பிரச்சினைகளோ, இனக்கலப்போ இல்லாமையால் ஏற்கனவே வாக்குறுதியளித்தற்கிணங்க அதனை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம். அதுவரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

அவ்வாறு பிரகடனம் செய்யப்படா விட்டால் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன், அவர்களும் அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்காக பொது மக்கள் அனைவரும் தமது அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற தீர்மானக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இக்கோரிக்கையை தொடர்ந்து இழுத்தடிப்பதானது இரண்டு ஊர்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துமெனஅரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இத்தீர்மானங்கள் அனைத்தும் நிகழ்வில் பங்கேற்றோரால் அல்லாஹ் அக்பர் எனும் கோஷத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.