ஜனாதிபதி எம்மிடம் ஒன்றை வாக்குறுதியளித்துவிட்டு அதற்கு மாற்றமாக செயற்படுவார் – ஞானசார தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கொஞ்சமும் நம்பிக்கை வைக்க முடியாது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு மற்றும் சிங்கலே அபி தேசிய இயக்கம் என்பன இணைந்து நேற்று அநுராதபுரத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், இந்நாட்டில் சட்ட திட்டங்கள் அனைத்தும் தெற்கில் மட்டும் தான் கடைப்பிடிக்கப்படுகின்றன. வடக்கில் அனைத்து சட்டங்களும் செயலற்றுப் போயுள்ளன. இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

தெற்கில் நாங்கள் ஏதாவது வாய் திறந்துவிட்டால் போதும், பொலிஸார் தனிப்படை அமைத்து தேடத் தொடங்கிவிடுவார்கள். இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்து காயப்படுத்துவார்கள்.

ஆனால் வடக்கில் விக்னேஸ்வரன் எவ்வகையான இனவாதக் கருத்துக்களை வௌியிட்டாலும் அவரை விசாரிக்கவே மாட்டார்கள். சிவாஜிலிங்கம் என்னதால் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.இலங்கையானது தற்போது பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாட்டைப் பாதுகாக்க தொழில்வான்மையாளர்களின் வழிகாட்டல்களை ஏற்று நடக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தலைவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ராஜித சேனாரத்ன என்று ஏராளம் தலைவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனர். ஆனால் எந்தவொரு நல்ல விடயமும் நடக்காமல் இருப்பதற்கும் இவர்கள் தான் காரணமாக அமைந்துள்ளனர்.

அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எந்தவிதத்திலும் கொஞ்சம் கூட நம்பவே முடியாது. அவர் எம்மிடம் ஒன்றை வாக்குறுதியளிப்பார். ஆனால் அந்த வாக்குறுதிக்கு மாற்றமாக அவர் செயற்படுவார். எனவே அவர் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்றும் ஞானசார தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.