இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் ஹொக்கி அணிகளை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

-ஜெம்சாத் இக்பால்-

பெண்களின் ஹொக்கி விளையாட்டு அனுபவம் புதிய யுகத்துக்குள் பிரவேசிப்பதாக தாம் கருதுவதாகவும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுபோலவே, மேற்கத்திய நாட்டுப் பெண்களுக்கு சற்றும் சலிக்காதவகையில் ஹொக்கி விளையாட்டிலும் தடம் பதித்தித்து வருவதாகவும், இலங்கையிலும் பெண்கள் மத்தியில் ஹொக்கி விளையாட்டு அண்மைக்காலமாக பிரபல்யம் அடைந்து வருவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு குதிரைபந்தையத் திடலில் அமைந்துள்ள ஹொக்கி மைதானத்தில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்ற பாகிஸ்தான் இலங்கை அணிகள் பங்குபற்றிய சிநேகபூர்வ போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,

பாகிஸ்தான் மகளிர் ஹொக்கி அணியினர் இலங்கை மகளிர் ஹொக்கி அணியினரோடு கொழும்பு குதிரைபந்தையத் திடலில் போட்டியில் ஈடுபட்டதை நாம் நேரில் பார்வையிட்டபோது இரு அணியினரும் மிகவும் சமர்த்தியமாக விளையாடி வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவடைந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பாகிஸ்தான் மகளிர் ஹொக்கி வீராங்கனைகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு எமது நாட்டு மகளிர் ஹொக்கி அணியினருடன் விளையாடியதைப் போன்று விரைவில் எமது மகளிர் ஹொக்கி அணியினர் பாகிஸ்தானுக்கும் விஜயம் மேற்கொள்வது இரு நாடுகளுக்கமிடையில் பரஸ்பரம் விளையாட்டுத்துறையில் நல்லிணக்கத்தையும், பரிந்துணர்வையும் ஏற்படுத்து என நம்புகின்றோம்.

சர்வதேச ஹொக்கிப் போட்டிகளில் மேற்குலகம் சாதனைகள் படைத்து வரும் சந்தர்ப்பத்தில் இலங்கை பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளும் வரலாறு படைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

எனது பிரத்தியேக உடற்பயிற்சியாளரான தேசிய ஹொக்கி வீரர் நாளீம் அவர்களின் முயற்சியின் பயனாக பெண்கள் ஹொக்கிக் குழுவினர் போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடினர். அதற்காக விசேடமாக அவரைப் பாராட்ட வேண்டும் என்றார்.

அமைச்சர் ஹக்கீமின் அழைப்பை ஏற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு சென்ற பிரஸ்தாப இரு நாட்டு மகளிர் ஹொக்கி அணியினரை அவர் அங்கு வரவேற்று உபசரித்தார். வீராங்கனைகளுக்கு அமைச்சர் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார். அத்துடன், பாகிஸ்தான் இலங்கை மகளிர் ஹொக்கி அணியினருக்கு பாராளுமன்ற அமர்வை அவதானிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.