• Home »
  • சமயம் »
  • கைபர்வாசிகளுடனான போரும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியும்

கைபர்வாசிகளுடனான போரும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியும்

 

மதீனாவிலிருந்து வடக்கே 80 மைல் தொலைவிலுள்ள ஊரான கைபர் முற்காலத்தில் விவசாயப் பூமியாகத் திகழ்ந்தது. குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதியாகினர். ஆனால் கைபர்வாசிகள் முஸ்லிம்களுக்குப் பெரும் தொல்லை கொடுப்பவர்களாகவே திகழ்ந்தனர். குறைஷிகளையும் பிற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போரை ஏற்பாடு செய்ததே இந்தக் கைபர்வாசிகள்தான். 

முஸ்லிம்களுடனான யூதர்களின் ஒப்பந்த மீறலுக்கும் காரணமானவர்கள் இவர்கள்தான். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களைத் தேடி அவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்து முஸ்லிம்களைச் சிரமங்களுக்கு உள்ளாக்கியவர்கள். அதனால் இவர்களுடன் போர் புரியும் கட்டாயத்திற்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர். 

“ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். இதை முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் இவ்வாறு அருள் புரிந்தான்” என்ற இறை வசனம் அச்சமயத்தில் அருளப்பட்டது. 

நபி (ஸல்) அவர்கள் போர் புரிய ஆசையுள்ளவர்களை மட்டும் கைபர் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்கள். கிட்டத்தட்ட 1400 தோழர்கள் இப்போரில் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் அபூஹுரைரா(ரலி) இஸ்லாமை ஏற்று மதீனாவிற்கு வந்தார்கள். எல்லாரும் சேர்ந்து கைபரை நோக்கிப் புறப்பட்டனர். 

நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் (காலை நேரத் தொழுகை) வரும் வரை யாரையும் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு அதாவது தொழுகைக்கான அழைப்பு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. 

இரவு நேரத்தில் கைபரை அடைந்தவர்கள் ஸுபுஹ் நேரம் வரை காத்திருந்து, பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் போருக்குத் தயாராக வாகனத்தில் ஏறினார்கள். அவர்களை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கைபர்வாசிகளும் போருக்குத் தயாராக மண் வெட்டிகளையும், மரக்கால் போன்றவைகளையும் ஆயுதமாகச் சுமந்து தாக்க வந்தனர். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் கிலியுடன் ‘அதோ முஹம்மத்! அவரின் படை!’ என்று பீதியடைந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்’ என்றார்கள். 

கைபரை முஸ்லிம்கள் கைப்பற்றினர். எந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டாலும் அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விடும், அதே போல் கைபர் கைப்பற்றப்பட்டதும் யூதர்களை நாடு கடத்திட இருக்கும்போது, யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், ‘நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். 

இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்’ என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் நிலக் குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்’ என்று கூறி அனுமதி அளித்தார்கள். 

கைதிகளிலுள்ள ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். 

திருக்குர்ஆன் 48:20. ஸஹீஹ் புகாரி 1:10:610, 1:8:371, 2:41:2338

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-