நம்பியதால் கைவிடப்பட்டிருக்கும் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? – எஸ்.எம்.சபீஸ்

நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் 
அஞ்சி யஞ்சி சாவார் – இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே 
வஞ்சனை பேய்களென்பார் – இந்த 
மரத்திலென்பார் – அந்தக் குளத்திலென்பார்,
துஞ்சுது முகட்டிலென்பார் – மிகத் 
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

-மகா கவி பாரதியார்

இடைவெளிகள் புகட்டும் உண்மைகள் எல்லாம் சொல்லிலடங்காது. உரிமைப் போராட்டத்துக்கு சகோதர சமூகம் ஆயுத வடிவம் கொடுத்த சம காலத்தில் முஸ்லிம் சமூகம் அரசியல் வடிவம் கொடுத்தது.

சமூகத்தின் எழுச்சியும் எதிர்காலமும் அதில் தான் தங்கியிருக்கிறது எனும் உணர்வு பொங்கியெழுந்த போது இழப்புகளின் வலியை தனித்து நின்று உணர முடியாத தனி மனிதர்களின் தோப்பானது சமூக அரசியலின் வளர்ச்சி.

ஆனால், இன்று தரித்து நின்று இதுவரை, எதுவரையென்று இரு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துள்ளோம்.

இதுவரை அடைந்தது என்ன? எதுவரை இந்தப் போக்கு எனும் இரு கேள்விகளைக் கேட்ட வண்ணம் சமூக வலைத்தள யுகத்தில் கருத்தாளர்களும், கருத்து மோதல்களுமாக நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக முஸ்லிம் சமூக அரசியல் நகர்ந்து கொண்டிருக்க, தேசியத்தில் நமது அடையாளம் தொலைந்து கொண்டிருக்கிறதோ எனும் அச்ச உணர்வும் மேலெழுகிறது.

போராட்ட வடிவம் அதிகார வட்டத்துக்குள் குறுகி நிற்பதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். யார் மீதும் பழி சுமத்தி, தரித்து நிற்க முடியாது.

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அதிகாரமுள்ளவர்களை சூழ்ந்து கொண்டு சுயலாபத்துக்காக கோசம் போடப் பழகிக்கொண்ட கூட்டத்தைக் கைவிட்டு நகரவும் முடியாது.

எல்லோரும் சேர்ந்த இந்த சமூகத்தில் அரசியல் விடியல் அஸ்தமித்து விட்டதா எனும் கேள்வி இப்போது மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எஞ்சியிருக்கும் வியூகம் என்ன? கடந்து வந்த பாதையில் தம் இன்னுயிர்களை நீத்த தியாகிகளுக்காக எதிர்கால அரசியல் செய்யப் போகும் கைம்மாறு என்ன? சமூகத்தை சூழ்ந்திருக்கும் இனவாதக் கருமேகங்களைத் தாண்டி இழப்புகளை மிஞ்சிய தற்காப்புக்கான வியூகம் என்ன என கேள்விகள் அடுக்கடுக்காய் வந்து குவிகின்றன.

அன்று அஃ;ரப் எனும் விடிவெள்ளியினால் எழுச்சி பெற்ற அரசியல் வடிவம் இன்றும் இருக்கிறதா என அவ்வப்போது நெஞ்சு உறுத்திக் கொண்டிருக்கிறது.

சமூகத்தை வழி நடாத்த வேண்டியவர்கள் அதே சமூகத்தை அடகு வைத்துத் தமது சுய இருப்பையும் உற்றஞ்சுற்றத்தின் நலன்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வட்டத்துக்குள் சேர்வதற்குத் தான் கட்சிகளுக்குள் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் சமூக விடியலின் அஸ்தமனம் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.

அவர், இவர் தான் இதற்குக் காரணம் எனும் வழமையான குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்து எங்கிருந்து மாற்றத்தை ஆரம்பிக்கலாம் என்று சிந்திக்கத் தூண்டுகிறது களநிலவரம்.

இந்த ஓசை என் மனதில் மாத்திரம் தனித்துக் கேட்கிறதா? சமூகம் இதையே எண்ணுகிறதா என்பதே இப்போது எழும் கேள்வி.

அதிகாரமும் பதவியும் மாறி மாறி ஒரு சில கைகளில் தங்கிக் கொண்டிருக்க அங்கேயே தமது உரிமைப் போராட்டத்தையும் அடகு வைத்திருக்கும் சமூகம் இந்த முப்பது வருடங்களில் அரசியல் ரீதியாக சாதித்துக் கொண்டது என்ன? எனும் கேள்விக்கு கட்சிகளின் நிழலிலிருந்து பதில் தரும் யாரும் வெளிச்சத்தில் நின்று சிந்திக்கத் தயாராக இல்லை.

ஆனாலும் அவர்கள் தங்கியிருப்பது நிரந்தர நிழலில்லையென்பதால் வெளிச்சத்தின் தேவை மங்கிப் போகவும் இல்லை. கடந்த கால ஏமாற்றங்கள் இக்கால இளைஞர்களின் மனங்களை ரணமாக்கி விட்டதன் தெறிப்பை இணையங்கள் எங்கும் அனலாய் பறக்கும் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன.

ஆனால் அவற்றின் எல்லை வெறும் இணையங்கள் தானா? எனும் கேள்வியிலிருந்தே சமூக அரசியலின் அஸ்தமனம் ஒவ்வொருவரின் மனதிலும் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனும் கேள்விக்கான பதிலும் ஆரம்பிக்கிறது.

நமது அபிலாசைகள் மத்தியிலிருந்து குறுகி மாகாணத்தில் தொங்கிக் கொண்டிருந்த காலத்துக்கும் புதிய அரசியல் திருத்தங்கள் சாவுமணி அடிக்கக் காத்திருக்க இதுவரை வழி கெடுத்தவர்கள் தமது இருப்பை தேசியக் கட்சிகள் மூலம் பாதுகாத்துக் கொள்வார்கள். நம்பியதால் கைவிடப்பட்டிருக்கும் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

ஒவ்வொரு தனி நபரும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

S.M. Safees