சந்திரனில் நீர் இருப்பது உறுதி..?

இந்தியாவின் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் போட்டோ எடுத்து அனுப்பியது.


அதன் அடிப்படையில் பரிசோதித்த போது தண்ணீருடன் சம்பந்தப்பட்ட ஹைட்ரோசில் மூலக் கூறுகள் அதில் இருப்பது தெரியவந்தது. ஹைட்ரோசில் மூலக்கூறு ஹைட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனை உள்ளடக்கியது. எனவே சந்திரனில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என 2009-ம் ஆண்டு அறிவியல் இதழில் கட்டுரை வெளியிட்டது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திராயன்-1 விண்கலம் எடுத்து அனுப்பிய சந்திரன் மண்ணியல் வரை படத்தின் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சந்திரனில் உள்ள மண்ணின் மேற்பரப்பு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என உறுதிபட தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு சந்திரனின் துருவங்களில் மட்டுமே தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது சந்திரன் முழுவதும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்த ஆய்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.