முஸ்லிம் உம்மத்து என்ற வகையில் மாத்திரமல்ல மனித குலத்தையே இந்த அவலம் அதிரவைத்திருக்கிறது – அதாஉல்லா

 

மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்கள், பாரம்பரியக் குடிகளாக அங்கு வாழ்ந்திருந்தும் முஸ்லிம்கள் என்பதற்காகவே சொல்லொன்னா அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மனித உரிமை மீறலுக்காக என்றும் அகதிகள் தொடர்பாகவும் உலகில் தனியான நிறுவனங்கள் இருந்தும் மனித உரிமை மீறலின் உச்சம் தொட்டுள்ள கொடுமைகளை அந்நாட்டு அரசும் இராணுவமும் சேர்ந்தே முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். பௌத்த மக்கள் நல்லவர்களாக இருந்தும் பௌத்த இனவாதம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டு இந்த அவலம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் உம்மத்து என்ற வகையில் மாத்திரமல்ல மனித குலத்தையே இந்த அவலம் அதிரவைத்திருக்கிறது.

அரபு, முஸ்லிம் உலகத்தில் துருக்கியினுடைய தலைவர் அதுர்கான் அவருடைய காத்திரமான அறிக்கையைத் தவிர வேறு எந்த அரபு முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் கண்டுகொள்ளாமல் நடிப்பதுபோல் தோன்றுகிறது. அதுர்கானுக்கு நமது வாழ்த்துக்கள். நமக்கு அண்மையில் உள்ள பாகிஸ்தானின் உடன்பிறப்புகளும் அதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுவும் அவதானிக்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். இவர்களுடைய குரலுக்கு சக்தி கொடு என்று ஆண்டவனைக் கேட்கிறேன். எங்களுடைய பேராதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இது இவ்வாறிருக்க,
மியன்மாரிலிருந்து அசின்விராது தேரரை ஞானசார தேரர் இலங்கைக்கு அழைத்து வந்தமையை இந்நாட்டு முஸ்லிம்கள் மறந்திருக்கமாட்டார்கள். ரோஹிங்யாவின் இனப்பரம்பலைப் போன்றே கிட்டத்தட்ட இலங்கையும் இனப்பரம்பலைக் கொண்டதாக எண்ணவேண்டியுள்ளது.

இது ஒருபுறமிருக்க,
அண்மைக்காலமாக நம் நாட்டு முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாற்று துன்பியலிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. ரோஹிங்காவின் இன்றைய நிலைமையைப் போன்றே இலங்கையிலும் சூழ்நிலையை உருவாக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன மாற்றுக் கருத்து இருக்கிறது? இதற்கிடையில் ஏலவே பௌத்த, இந்து பேரினவாதம் இந்நாட்டில் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக்கிக் கொண்டிருக்கிறது. போதாததற்கு ஐஎஸ்.ஐஎஸ். வேறு. இத்தருணத்தில் நமது நடவடிக்கைகளும் அதற்கு தீணி போடுவதாய் அமையக்கூடாது. சூடு கண்ட பூனைகள் நாம்.

எனவே முஸ்லிம் உடன்பிறப்புகளே,
முதலில் முடியுமானவரை எல்லா இடங்களிலிருந்தும் துஆப் பிரார்த்தனை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையிலும் பின்னரும் இலங்கை முழுவதுமுள்ள முஸ்லிம் உம்மாக்கள் அல்லாஹ்விடம் அழுது துஆக் கேளுங்கள்.

இந்த நாட்டின் பௌத்த மக்கள் கருணை உள்ளவர்கள் என்பதால் மத, இன பாகுபாடுகளுக்கு அப்பால் சென்று மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு நாடு என்கின்ற வகையில் இலங்கை அரசு மியன்மார் அரசை வலியுறுத்த வேண்டும்.

நமக்கொரு கடமை இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அரபுலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தூங்கிக் கிடக்கின்ற அவரவர்களது நாட்டுத் தலைமைகள் முஸ்லிம்கள்தானா? என்று ஒருமுறை உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.

வல்லரசுகள் என்று வாய்கிழியப் பீத்தும் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகள் இவ்வாறான கொடுமைக்கு ஆதரவாகவோ அல்லது கண்டிராமல் இருப்பதுபோல் நடிப்பதுவோ, அவர்கள் மனித குலத்தின் பலவீனர்கள்; என்பதனை காட்டி நிற்கிறது. இவைகளையும் அவர்களின் முகத்தில் எடுத்தியம்ப வேண்டிய தருணமும் வந்திருக்கிறது.

ஐ.நா சபை, ஜெனீவா சபை போன்றவை உலகில் நடந்த உச்சம் தொட்ட மனித குல அவலம் தொடர்பாக காத்திரமாகப் பேசவுமில்லை, நடவடிக்கை எடுக்கவுமில்லை என்றால், இதன்பிறகு உங்கள் சபையானது ஓரவஞ்சனையான மானங்கெட்ட சபை என்பதை அவர்களின் மூஞ்சியிலே சொல்லிவிட்டு வர வேண்டியுமுள்ளது.

இதைவிடுத்து, நான் முந்தி நீ முந்தி என்கின்ற அடிப்படையில் அவசரப்பட்டு மனக்கத் தாழிக்கப்போய் சட்டியை உடைத்துவிடக் கூடாது என்ற புத்தியும் தேவைப்படுகிறது. எனவே, இலங்கை வாழ் நமது முஸ்லிம் மக்கள் தசையாடுகிறது என்பதற்காக அச்சதையையே வெட்டுவதற்கு இடமளிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ரோஹிங்காவிலும் அதுதான் நடக்கிறது.

எது செய்வதாக இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நன்கு தீர்மானித்து ஒரு பொதுச் சபை வழிகாட்டும் அடிப்படையில்தான் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். மாறாக எடுத்தாற்போல் கண்டனம், போராட்டம், நிறுத்து என்கின்ற வாசகங்களை ஏந்துகின்ற கட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என என் உடன்பிறப்புகளை அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.

இதற்கு கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசியப்படுகின்ற புத்திஜீவிகளுமாக ஒன்று சேர்ந்து மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆகக்குறைந்தது முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சர் அவர்கள் முன்வந்து செயற்பட வேண்டுமென்பதனை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். மக்கள் அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும்படி வேண்டுகிறேன். இளைஞர்கள், முகநூல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இதனைப் பக்குவமாக கையாள வேண்டுமென்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் – தேசிய காங்கிரஸ்