நீங்கள் காங்கிறஸ் என்ற இருண்ட குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

ஹக்கீமின் அட்டாளச்சேனை ஆதரவாளர்களுக்கு,

குமாரியின் காதலன் உங்கள் பிரதேசத்துக்கு இன்று வருகிறார்.வரவேற்கக் காத்திருப்பீர்கள்.

பிளேட்டோவின் குகைவாசிகளின் கதை உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன்.கேட்டுவிட்டு கூட்டத்திற்குப் போங்கள்.

ஒரு குகையில் மூன்று மனிதர்கள் பிறந்ததுமுதல் வாழ்ந்து வந்தார்கள்.அந்தக் குகைதான் அவர்களுக்கு உலகம்.வெளியுலகம் அவர்களுக்குத் தெரியாது. குகைக்கு வெளியே நடமாடுபவைகளின் நிழல்கள் சூரிய ஒளிபட்டு குகைக்குள் நிழலாகத் தெரியும்.அந்த நிழல்களையே நிஜம் என்று அவர்கள் நம்பி வாழ்ந்து வந்தார்கள்.அவர்களைப் பொறுத்தவரைக்கும் அந்த நிழல்கள்தான் நிஜங்கள்.

ஒரு நாள் அந்தக் குகையில் இருந்த மனிதன் ஒருவன் வெளியே செல்ல நேரிட்டது.அவன் வெளியுலகத்தைப் பார்த்த பின்புதான் தானும் தனது இரண்டு நண்பர்களும் இதுவரைக்கும் குகையில் பார்த்தவை நிஜமல்ல தான் பார்ப்பதுதான் நிஜம் என்று புரிந்து கொண்டான்.உடனே தகவலைத் தெரிவிக்க குகைக்குள் ஓடினான்.

”நண்பர்களே இதுவரைக்கும் நாம் பார்த்துக்கொண்டிருந்தவை எல்லாம் உண்மை அல்ல.அவை போலிகள்.நிஜங்கள் குகைக்கு வெளியே இருக்கிறது” என்றான். நிழல்களையே நிஜமாக நினைத்துக்கொண்டிருந்த அந்த பெரும்பான்மை நண்பர்கள் நிஜத்தைக் கண்டவனைப் பைத்தியம் என்றார்கள்.அவனைக் கொன்று போட்டார்கள்.இறுதி வரைக்கும் நிழல்களை நிஜங்கள் என்று நம்பியே அவர்கள் வாழ்ந்துவந்தார்கள்.

இது பிளேட்டோ தனது குடியரசு நூலில் சொல்லும் கதை.இதில் உங்களுக்குச் சில சேதி இருக்கிறது.

நீங்கள் காங்கிறஸ் என்ற இருண்ட குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.அரசியல்வாதிகள் உங்களுக்குக் காட்டும் இருட்டு விம்பங்களை நிஜம் என்று நம்பி குகைக்குள்ளேயே கிடக்கிறீர்கள்.உங்கள் இருட்குகைகளை விட்டு வெளியே போனவர்கள் அதிகம்.அவர்கள் எல்லோரும் காங்கிறசின் நிஜத்தை,உண்மை முகத்தை,இருட்குகைக்குள் உங்களை அவர்கள் அடைத்துவைத்திருக்கும் அடிமைக்கதையை.,அவர்களின் அரக்க நிஜங்களை மறைத்து அழகான நிழல்களாக உங்களுக்குக் காட்டும் மாய தந்திரத்தை பலர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் உண்மை சொல்பவர்களை பைத்தியம் என்கிறீர்கள்.துரோகி என்று பட்டம் சூட்டுகிறீகள்.பரிதாபமாக அவர்களைக் கொன்றும் விடுகிறீர்கள்.இருட்டின் இன்பத்திலே நீங்கள் இருக்கின்றீர்கள். உண்மையின் சுகத்தைப் புரியாதவனுக்கு அறியாமை இன்பமாகத்தான் இருக்கும்.

இன்றும் அந்தக் குமாரியின் காதலர் உங்கள் ஊருக்கு வருவார்.பாவமே செய்யாத பால்வடியும் முகத்தைக் காட்டிப் புன்னகைப்பார்.எழுந்து நின்று கைகுலுக்கி உங்களைக் கட்டியணைப்பார்.இந்தக் கட்சியைக் கட்டிக்காத்த செம்மல்கள் நீங்கள் என்று உங்கள் காதுகளுக்குள் அவர் மகரந்த வார்த்தைகளால் மகுடி ஊதுவார்.தேசியப்பட்டியல் என்ற புழுவை வீசி மீண்டும் உங்களை மீன் பிடிப்பார்.அவரின் அரக்க முகத்தை குகைக்கு வெளியே மறைத்து,அழகு முகத்தின் விம்பத்தைக் காட்டி உங்களை வீழ்த்துவார்.அழகிய மாளிகையின் ஆடம்பரத்தைக் காட்டி அதற்குள்ளே உங்களைச் சிறைபிடிப்பார்.மாளிகையின் சுகத்தில் உங்கள் கைகளில் அவர்கட்டிய அடிமைச் சங்கிலியை மறந்துவிடுவீர்கள்.குகையே இன்பம் என்று இருப்பீர்கள். உண்மையைக் கொண்டுவருபனைக் கொல்வீர்கள்.

நீங்கள் நிஜத்தைத் தேடும்வரைக்கும்,உங்கள் கைகளில் காங்கிரஸ் கட்டிய அடிமைச் சங்கிலியின் கனத்தை உணரும் வரைக்கும்,அவர் ஒவ்வொரு முறையும் ஊதும் மகுடிக்கு உங்கள் காதுகளை இறுகப் பொத்தும் வரைக்கும்,நீங்கள் குகையை விட்டு வெளியேறும்வரைக்கும் நிழல் நிஜமாகத்தான் தெரியும்.அந்த நிழலேயே வாழ்ந்து,அதிலே நீங்கள் இறந்தும் விடுவீர்கள்.

உங்கள் குகையை விட்டு வெளியே வாருங்கள்.நிழல்களில் அழகொழுகும் முகங்களின் மயங்காமல் நிஜத்தின் கோரப்பற்களைக் கண்டுபிடியுங்கள்.அரக்கர்களை அழித்துவிடுங்கள்.

பிர்அவ்ன்கள் திருந்தியதாகச் சரித்திரம் உண்டா?மூஸாக்கள் நாங்கள்தான் அவர்களை மூழ்கடிக்கவேண்டும்.

போங்கள்.உங்கள் தலைவர் ஆரம்பிக்கிறார். நஃமதுஹு வனுசல்ல்லியலா ரசூலிஹில் கரீம்.

 

Raazi Muhamath Jaabeer