• Home »
  • Slider »
  • உங்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தானே எங்கள் அரசியலைத் தீர்மானித்தது ? : ராசி முஹம்மத் ஜாபிர்

உங்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தானே எங்கள் அரசியலைத் தீர்மானித்தது ? : ராசி முஹம்மத் ஜாபிர்

ராசி முஹம்மத் ஜாபிர்

சில நேரங்களில் சில மனிதர்கள்

  குமாரி கூரே பற்றிய தொடரை நான் எழுதிய ஆரம்பத்தில் துள்ளிக் குதித்துத் துடித்தவர்கள் இப்போது அடங்கிப்போய்விட்டார்கள்.எனது கதையில் உண்மை இருக்கிறது என்று அவர்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.இதை மூடி,மறைத்து,வெட்டிப் புதைத்து எரித்து அழித்துவிட்டு இதையும் கடந்துபோகலாம் என்று நினைத்தவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்களின் அரசியல் பரம்பரையையே அழித்துவிடும் பூதமாக இது வெளிவரும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பதை மறந்திருப்பார்கள்.

இது நடக்கவே இல்லை என்று சொல்லிப்பார்த்தார்கள்.இம்முறை மக்கள் மயங்கவே இல்லை.இது இட்டுக்கட்டப்பட்டகதை என்று இட்டுக்கட்டிச் சொன்னார்கள் எடுபடவே இல்லை.என்ன செய்வது?அவர்கள் அம்புப்புட்டியில் எஞ்சியிருக்கும் இறுதி ஆயுதத்தை எடுத்து எறிகிறார்கள்.அதுதான் இஸ்லாம்.

‘தனிப்பட்ட ஒரு மனிதனின் மானத்தை பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்துகிறீர்கள்” –இதுதான் அவர்களின் கடைசி ஆயுதம்.இதன் பிறகு அவர்கள் தோற்றுப்போவார்கள்.

யார் தனிப்பட்ட மனிதன்?

அதிகாலையில் எழுந்து அவசரமாக முகத்தை அலம்பிக்கொண்டு வேகமாக வயலுக்குச் சென்று சாறனை வரிந்து கட்டிக்கொண்டு வரம்பு செதுக்கும் ஒரு அப்துஸ் ஸமதாக ஹக்கீம் இருந்திருந்தால் அவர் ஒரு தனிப்பட்ட மனிதன்.

மாலைச் சூரியன் மங்குவதற்கு முன்னர் வலையின் சிக்குகளைப் பிரித்து சீர்படுத்தி,நல்ல தண்ணீரை போத்தலில் நிரப்பிக்கொண்டு,முழுப்பலத்தையும் திரட்டி தோணியைத் தள்ளிவிட்டு மறுநாள் மீன் பிடித்து வரும் முகம்மத் மீரானாக ஹக்கீம் இருந்திருந்தால் அவர் ஒரு தனிப்பட்ட மனிதன்.

கடன் வாங்கி கஞ்சி காய்ச்சி அதனை மரநிழலில் நின்று கூவி விற்றுவிட்டு, வருவாயில் கருவாடும்,கிழங்கும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும் அலித்தம்பியாக ஹக்கீம் இருந்திருந்தால் அவர் ஒரு தனிப்பட்ட மனிதன்.

ஐந்து நாளும் ஆபீஸில் வேலை செய்து அலுப்பாகி ஒரு நாயிறன்று குடும்பத்தையும், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தூர இருக்கும் ஒரு மலைச்சோலையில் பறவைகளைப் பார்த்து ரசித்தபடி பகலுணவு உண்ணும் ஒரு பதுருஸ்ஸமானாக ஹக்கீம் இருந்திருந்தால் அவர் ஒரு தனிப்பட்ட மனிதன்.

மேற்சொன்னவர்களில் எவராகவும் ஹக்கீம் இருந்திருந்தால் அந்தப்புரம் கட்டி ஆயிரம் கோதையரை வைத்துக் கொண்டு கோகுலக் கண்ணனாகக் கொஞ்சிக் குலவித் திரிந்தாலும், திரௌபதியின் துர்ச்சாதனனாக துகிலுரித்தெறிந்தாலும் அது அவருக்கும் அவர் இறைவனுக்கும் இடையில் உள்ள விடயம்.அப்போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.அப்போது நாங்கள் பேசினால் தவறாகும்.அவர்களின் மானத்தோடு விளையாடுவது என்பது பொருந்தும்.

ஆனால்,
ஹக்கீம் வரம்பு வெட்டும் ஒரு விவசாயியா?
மீன் பிடிக்கும் ஒரு மீனவனா?
கஞ்சி விற்கும் ஒரு வியாபாரியா?
வேலை செய்யும் ஒரு தொழிலாளியா? 
இல்லையே.இல்லவே இல்லையே.
அப்படியென்றால் யார் ஹக்கீம்?

ஹக்கீம் பொறுப்புக்கூறும் பொறுப்பாளி.ஒரு மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் மட்டும் பொறுப்புதாரியா? இல்லை.லட்சக்கணக்கான மக்களின் அரசியல் பொறுப்புதாரி.இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்தப் பேரிறையின் வேதத்தையும்,எம் உயிரிலும் மேலான எம்பெருமானாரின் வாக்குகளையும் யாப்பாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர்.எங்கள் அரசியல் கனவை,அபிலாசைகளை,அரசியல் கோப தாபங்களை,இழப்புக்களை,உரிமைகளை உரக்கச்சொல்வதற்காக நாங்கள் வாக்களித்து அனுப்பியிருக்கும் அரசியல் தலைவர்.இவர் தனிப்பட்ட மனிதரா?

இப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் அரசியல் பொறுப்புதாரி ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதாக ஏமாற்றியிருக்கிறார்,அந்தப் பெண்ணை இஸ்லாத்தைக் காட்டி ஏமாற்றியிருக்கிறார்,அந்தத் தொடர்பைத் திட்டம் போட்டு மாற்றியிருக்கிறார் ,அந்தப் பெண்ணுக்கு கொழும்பில் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்,அவளின் வேலைக்காரியின் சாட்சியத்தை அழிக்க வேலைக்காரியின் கணவனுக்கு வாகனம் வாங்கிகொடுத்திருக்கிறார் ,அவளின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறார்.அதனைப் பின்னர் உலமாக்களுக்கு முன்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார். வாக்களித்த எங்களுக்கு நாடகமாடி மறைத்திருக்கிறார்.

குமாரி கூரேயோடு முடிந்து போனாலும் பரவாயில்லை.விட்டுவிடலாம்.விபச்சாரத்தையும்,போதையையும் பொழுதுபோக்காகச் செய்பவர்கள், வெளிநாடுகளில் இரட்டை அறைகள் போட்டு பெண்கள் வைத்திருப்பவர்கள்,மேசையில் இருக்கும் மஞ்சள் பத்திரிகையை எடுத்து ‘கோல் கேள்ஸ்’ அழைப்பவர்கள்,கசினோவில் அரசாங்க வாகனத்தை அடமானம் வைத்து கசினோக்கடன் கட்டுபவர்கள்,உங்களல் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பிரிந்தது. ஆனால் அந்தக் குடும்பங்களின் பெயரை எங்களால் கூற முடியாது ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட மனிதர்கள்.இதுதான் தனிமனிதர்களுக்கும் பொதுமனிதர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு….. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.இதுவரைக்கும் எழுதியதெல்லாம் ஏற்கனவே பத்திரிகைகளில் வந்த விடயங்கள் மாத்திரம்தான்.இனி சொல்லப்போவதை நினைத்தால் எனது பேனை நடுங்கு நடுங்கு என்று நடுங்குகிறது. அதனை நான் அடங்கு,அடங்கு என்று அடக்கி வைக்கிறேன்.
சரி இதுவும் தனிப்பட்ட விடயம் என்று வைத்துக்கொள்வோமே?

பின்னர் ஏன் இந்த தனிப்பட்ட விடயம் சபாநாயர் தெரிவில் பாதிப்புச்செலுத்த முனைந்தது.

முஸ்லீம்களை முற்றாக அடிமையாக்கும் பதினெட்டாம் சீர்திருத்தத்திற்கு உங்களை ஏன் அது கை உயர்த்த வைத்தது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது ஏன் டயஸ்போராவின் கைகளில் இந்த விவகாரம் போனது?

நீங்கள் வழமையாக ஒழித்து ஒதுங்கும் வீட்டின் சொந்தக்காரரான அந்த அமைச்சரின் கைகளில் எப்படிச் சிக்கியது.

பின்னர் கில்லி மஹாராஜாவிடம் இருந்து எப்படி மஹிந்தவின் கைகளுக்கு சென்றது.

ஏன் இந்த விவகாரம் நீதியமைச்சராக இருந்துகொண்டு நிவிகெகும திட்டத்தை சரியில்லை என்று சொன்ன ஒரு நீதியான நீதிபதி சிராணி பண்டாரநாயகாவை விலக்குவதற்கு கை உயர்த்த வைத்தது.

உங்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தானே எங்கள் அரசியலைத் தீர்மானித்தது? உங்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தானே எங்கள் அரசியல் விதியை எழுதியது. ஆனால் நாங்கள் பேசக்கூடாது அப்படியா? 

உங்கள் தனிப்பட்ட விவகாரம் ஏன் எங்கள் அரசியலைக் குறுக்கறுக்கிறது.அதைச் சொல்லுங்கள் முதலில்.

அன்றே மூடிய கதவுகளுக்குள் அவர் ஒப்புக்கொண்டபோதே’’சரி நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.உங்கள் செய்கை முஸ்லீம்களின் அரசியலைப் பாதிக்கும்.வெளியிடுவதாக உங்களை மிரட்டுவார்கள்.நீங்கள் வேறு வழியில்லாமல் முஸ்லீம் அரசியலை விற்க வேண்டி வரும்.முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி உங்களால் உரத்துப்பேச முடியாமல் போகும். நீங்கள் தலைமைத்துவத்தில் இருந்து விலகிவிடுங்கள்’’ என்று அன்றே அவரை விலக்கியிருந்தால் இந்த விவகாரம் குமாரி கூரேயோடு மாத்திரம் முடிந்திருக்குமே.

இதனை அன்றே நீங்கள் செய்திருந்தால் இன்று நாங்கள் பேனையைத் தூக்க வேண்டிய அவசியமே வந்திராதே.இத்தனை பிரச்சினையும் இவ்வளவு தூரம் வந்திருக்காதே.உங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக அவரை இன்னும் தலைவராக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் அன்று மறைத்து மூடியதால்தான் நாங்கள் இன்று எழும்ப நேரிட்டது.

வீடியோவை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மிரட்டுகிறான்,ஆளுங்கட்சி மிரட்டுகிறான்,தமிழன் மிரட்டுகிறான் இது தனிப்பட்ட விடயமா?

மனிதனின் மானத்தோடு விளையாடாதீர்கள் என்று சொல்லிக்கொடுத்த நபிகளார்தான் 
‘மக்களை ஆட்சி செய்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவன் மக்களின் விவகாரங்களில் சரியாக நடந்துகொள்ளவில்லையெனில் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான்’ என்று சொல்லிக்கொடுத்தார்களே அதை வாசித்தீர்களா?

‘அதிகாரம் கொண்ட ஒரு தலைவன் மக்களை ஏமாற்றிய நிலையில் மரணித்துவிட்டால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடுத்துவிடுவான் என்று அதே நபிகளார்தான் சொல்லிக்கொடுத்தார்களே தேடிப்பார்த்தீர்களா?

அது என்ன ஆசாத் சாலி செய்தால் விபச்சாரம்,தலைமைக்கு தகுதியில்லை,ஆனால் ஹக்கீம் அவர்கள் செய்தால் மாத்திரம் இஸ்லாம்,அவதூறு,மற்றவரின் மானம்.எப்படிப்பட்ட மனிதப்பிறவிகள் நீங்கள்?

நீங்கள் தனிப்பட்ட மனிதர்களாக மாறி விரும்பியதைச் செய்யுங்கள்.மஞ்சத்தில் புரண்டு மகிழுங்கள்.தண்ணித் தொட்டியைத் தேடும் கன்றுக்குட்டியாக மாறுங்கள் யார் கண்டார் உங்களை.ஆனால் தலைவராக செய்யாதீர்கள்.எங்கள் பொறுப்புதாரியாகச் செய்யாதீர்கள்.அப்போதுதான் அந்த விடயங்களை உங்களை நாங்கள் எதிர்க்க விளைகிறோம்.

விபச்சாரம் செய்தவனைப் பூமியில் வாழ்வதற்குக் கூட அல்லாஹ் அனுமதிக்கவில்லை.பூமியில் வாழவே தகுதி இழந்த மனிதனை நீங்கள் தலைவனாக்கி வைத்திருக்கிறீர்கள்.எப்படி உங்கள் சமூகம் உருப்படும்?.

எல்லோரும் அமைதியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த விடயங்களை நாங்கள் தைரியமாக வெளியில் சொல்கிறோம். அதிகாரத்தை எதிர்ப்பதில் அவர்களுக்குப் பயம். அந்தப் பயம் எங்களிடம் இல்லை.நீங்கள் வஞ்சித்து வரும் எங்கள் அப்பாவி மக்களுக்கு உங்கள் முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறோம். பிழையான அதிகாரத்தை,நீங்கள் எங்கள் மக்களுக்கு மூடி மறைத்த உண்மைகளை வெளியே சொல்கிறோம்.

சரி நாங்கள் எழுதக்கூடாது.உயர் பீடத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள்.உங்கள் சூறா சபை செத்துவிட்டது.நாங்கள் பேசவும் கூடாது.அப்போது இதற்கு என்ன முடிவு.நீங்கள் ஆட்டம் போடுவீர்கள்.நாங்கள் அடங்கி அமைதியாகி ஒடுங்கி ஓரத்தில் நின்று உங்கள் உல்லாசங்களை கண்டு களிக்கவேண்டுமா?

சரி.நாங்கள் சொல்வதெல்லாம் பிழை.செய்வதெல்லாம் பாவம்.நீங்கள் தீர்வைச் சொல்லுங்களேன்.முஸ்லிம் அரசியலுக்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒருவரை எப்படி எதிர்ப்பது என்று சொல்லித்தாருங்களேன்.ஹக்கீம் அவர்களுடைய விடயத்தில் எப்படி நடந்துகொள்வது என்று சொல்லுங்களேன்.

எப்போது நாம் அநீதியாக அதிகாரங்களுக்கு எதிராக எழும்பி நிற்கின்றோமோ அப்போது தான் எங்கள் சமூகம் விடிவு பெறும்.

( மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது )
முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-