அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது அத்தியவசியம் : ஜனாதிபதி

தேசிய இணக்க அரசாங்கம் சம்பந்தமான உடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையில் உள்ள விடயங்களை மீறி செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என இரண்டு தரப்பினருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூட்டு பொறுப்பை தொடர்ந்தும் மீறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செயற்படுவது சிக்கலுக்குரியது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இது குறித்து கூடிய கவனத்தை செலுத்துவதாகவும் தேசிய அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது அத்தியாவசியமானது எனக் கூறியுள்ளார்.