எது முதலில்…?

Mohamed Nizous

தொழுதியா என்று கேட்டால்
தொடர்ந்து வேலை நேரமில்லை
உழ்ஹிய்யா மாடு தேடி
ஓடுகிறேன் என்றுரைப்பார்

உம்மாக்கு சுகமில்லை
உடனிருந்து பாரென்றால்
உம்றாக்கு மக்கா போய்
ஓதுகிறேன் துஆ என்பார்

கடன் கொஞ்சம் தாங்க என்று
கஷ்டப்படும் ஏழை கேட்டால்
உடன் ஒரு ஹதீஸ் கூறி
உகந்ததல்ல கடன் என்பார்

பள்ளிச் சுவர்களுக்கு
பத்துத் தரம் பெய்ண்ட் அடிப்பார்
உள் வீட்டில் ராத்தா பிள்ளை
உண்ண இன்றி பசி இருக்கும.

காரின் டேஷ் போட்டில்
கலிமா ஸ்டிக்கர் ஒட்டிருக்கு
RC புக் வட்டிக்கு
அடைமானம் வெச்சிருக்கு.

மாஷா அள்ளாஹ் போட்டிருக்கு
மக்கா கிரா அத் போட்டிருக்கு
வீச வேண்டிய பழைக கறியை
வெட்டி கொத்துள் போட்டிருக்கு.

ஹலால் லொகோ இருக்காண்ணு
கட்டாயம் பார்த்தெடுப்பார்
நிலம் சொத்து பிடிப்பதென்றால்
முழம் கணக்கில் அபகரிப்பார்.

வாப்பா வா விளையாட
வாஞ்சையோடு பிள்ளை கேட்டால்
கூப்பாடு போடாதே
கொமண்ட்ஸ் எழுதும் போது என்பார்

இப்படி அரைகுறையாய்
எக்குத் தப்பாய் புரிந்து கொண்டு
எப்படி ஓடி ஆடினாலும்
இல்லை எந்த நன்மைகளும்

எது முதலில் செய்ய வேண்டும்
எதை அடுத்து செய்ய வேண்டும்
அது விளங்கா வாழ்க்கையாலே
ஆன பலன் ஒன்றுமில்லை.