80களின் இறுதியில் ஓர் இரவு

Mohamed Nizous

கரண்டில்லா ஊர்
கருப்பாய் பயம் காட்டும்
மிரண்ட பார்வைகளும்
திரண்ட பயங்களுமாய்
ஒவ்வொரு இரவும்
உயிருக்கு விலை பேசும்

பள்ளிக்கு போயிட்டு
பத்திரமா வா மன
உள்ளுக்குள் பயத்துடன்
உம்மா சொல்லுவார்.

‘அவன்களிடம்’ அகப்பட்டால்
அசிங்கமாய் சாகாமல்
எவனையாலும் குத்தவென்று
இடுப்பில கத்தி இருக்கும்

வெளிச்சத்தைக் கண்டால்
வெடி வைக்கக் கூடும்
ஒழிச்சு ஒழிச்சு
ஓரமாய் செல்ல வேண்டும்.

இருளைக் கிழித்து
இயந்திரத் துப்பாக்கி
உறுமத் தொடங்க
உம்மாக்கு உதறும்.

பள்ளிக்குள் போனானோ
பாதை இடையிலயோ
சொல்லுடி புள்ள
சுடுறவன் யாரெண்டு

ஸ்டேசன் பக்கம்தான்
எழும்புதும்மா வெடிச் சத்தம்
எஸ் டி எப் காரன்தான்
இந்த gun பாவிப்பான்

‘மெக்’ முடிஞ்ச பிறகு
மேலதிக சத்தமில்லை
டக்கென்று நிண்டு போயிட்டு
சிக்கல் ஒண்டும் இல்ல போல

யுத்தம் தந்த அனுபவத்தில்
மொத்தத்தையும் ஊகித்து
உம்மாவிடம் ராத்தா சொல்ல
ஓதி ஓதி பிரார்த்திப்பா.

தூரத்தில் டயர் எரிய
ஊர் விழிப்புக் குழு திரிய
காரிருளில் திரும்பி வர
கதைக்கும் சத்தம் சிங்களத்தில்

ஐடெண்டிய தெண்ட என்று
ஆரோ அச்சுறுத்த
இயந்திரத் துப்பாக்கிகள்
ஏழெட்டு நீண்டிருக்கும்

சுத்தமாய் விசாரித்து
சோதனையும் போடும் போது
கத்தியைப் பார்த்து விட்டு
கமக் நே சொல்லப்படும்.

வீடு வந்து சேர்ந்து
விளக்கொளியில் சாப்பிட்டு
படிக்கத் தொடங்கையிலே
வெடிக்கும் ஷெல் அடி.

கிணற்றடிய போகாத
கேற்ற லொக் பண்ணு
ரெண்டு பக்கமும் அடிக்கான்
கண்ட படி கதை தொடரும்

எத்தனை பேர் செத்தானோ
என்ன சேதங்களோ
நித்திரை மறந்து போகும்
நேரங்கள் கரைந்து போகும்

விடிகின்ற வரைக்கும்
வெடி ஒலி கேட்கும்
கொடிய யுத்தத்தில்
கொஞ்சமே இங்குரைத்தேன்

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-