அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழா வடக்கில் : அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

சுஐப் எம். காசிம்
சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
குருணாகலையில் இடம்பெறவுள்ள கூட்டுறவுத் தின விழாவையொட்டி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இத்தகவலைத் தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்குஹெட்டி, கூட்டுறவு ஆணையாளர் எஸ்.எல். நசீர் மற்றும் கூட்டுறவு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
மாகாணக் கூட்டுறவு அமைச்சர்கள்,  பிராந்திய கூட்டுறவுக் ஆணையாளர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரின் நீண்டகால முயற்சி, பங்களிப்பு மற்றும் பகீரத பிரயத்தனங்களினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டுறவுக் கொள்கை, கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் ஒரு புதிய பரிமாணத்தையும் வலுவூட்டலையும் ஏற்படுத்துவதற்கு வடிகானாக இருக்கும் என நம்புகின்றோம்.
கூட்டுறவுத்துறை நமது நாட்டில் பாரம்பரியமாகவும், மக்களுடன் பின்னிப்பிணைந்ததாகவும் அமைந்துவிட்டது. எனினும் கடந்த காலங்களில் இத்துறையில் ஏற்பட்டிருந்த சீரழிவு காரணமாக அதகைக் கட்டியெழுப்பும் வகையிலேயே நாங்கள் புதிய திட்டங்களை வகுத்து வருகின்றோம்.
கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவுத் தின விழாவில் நாடெங்கிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வையற்ற வாகனம் அல்லது லொறி ஒன்றை வழங்க வேண்டுடிமன கூட்டுறவு ஊழியர்கள் ஜானாதிபதியடம் விடுத்த வேண்டுகோளுக்கு தற்போது பயன் கிடைத்துள்ளது. இதற்கென அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமாப்;பிக்கப்பட்டு அது தொடர்பிலான முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவென்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன்.
எனது அமைச்சின் கீழான சதொச நிறுவனத்தின் மூலம் 8000 பிரத்தியேக தனியார் விற்பனை நிலையங்களை (பிரஞ்சைஸ் கடைகள்) அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த வருடம் 1000 பிரஞ்சைஸ் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன்  இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.  இது நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறம், நகரப்புறம் என்ற வேறுபாடின்றி ஒரே விலையில் அத்தியவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்த சதொசவை இலாபகரமானதாக்கி வினைத்திறன் கொண்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நிறுவனமாக மாற்றி இருக்கின்றோம். சுதொசவின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத, மக்கள் நலனுக்கு குந்தகமான  செயற்படும் தீய சக்திகள் அந்த நிறுவனத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி அதனை வீழ்த்தும் முயற்சியில் செயற்படுகின்றன.  பிலாஸ்டிக் அரிசி என்ற ஒரு மாயையை சதொச நிறுவனத்துடன் இணைத்து பரப்பிய பிரச்சாரங்கள் இந்த சதியின் பின்னணியே. சில ஊடகங்கள் இதனை பெரிதுப்படுத்தியமை வேதனையானதும் கூட. பாகிஸ்தான் அரசுடன் அமைச்சரான என்னையும் தொடர்புபடுத்தி இனவாதக் கண்ணோட்டத்தில் பிளாஸ்டிக அரிசி என்ற பெயரில் வேண்டுமென்றே பூதாகரப்படுத்தியமை வேதனையானது என  அமைச்சர் விசனம் தெரிவித்தார்.