முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு அரசியலதிகாரம் உள்ள பலமுள்ளவர்களாக மாற வேண்டும் : அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

எம்.எஸ்.எம்.சாஹிர்
முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வானது ஆட்சி அதிகாரங்களை மாற்றுவது அல்ல. மாறாக முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு அரசியலதிகாரம் உள்ள பலமுள்ளவர்களாக மாற வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
சியனே ஊடக வட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்திய ‘மாற்றத்தை நோக்கிய ஊடகப்பயணம்” என்ற தொனிப்பொருளிலான ஊடகக் கருத்தரங்கு கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட அல் – பத்ரியா மகாவித்தியாலத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
சியன ஊடக வட்டத் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  க.பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ புள்ளியினைப் பெற்ற கஹட்டோவிட்ட மாணவர்கள் சியனே ஊடக வட்ட அமைப்பினால் கௌரவிக்கப்பட்டு, பண உதவிகளும் வழங்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 
இன்று நாளாந்தம் பல பிரச்சினைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் வெறுமனே ஆட்சிகளை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. கடந்த ஆட்சிக்காலத்திலே எங்களுடைய பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது. அளுத்கமை – பேருவலை சம்பவங்கள் போன்ற பல சம்பவங்கள் ஏற்பட்ட நேரத்தில் கடந்த ஆட்சியை தூக்கி எறிந்து மைத்திரிபால சிறிசேனவை அந்த இடத்துக்கு கொண்டு வந்தால் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கலாம் என்று கருதி முஸ்லிம் சமூகத்திலே 90 சதவீதமான மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம்.  ஆனால் இன்று அதை விட மோசமாக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 வட மாகாணத்திலே முஸ்லிம்களுக்குச் சொந்தமான 45ஆயிரம் ஏக்கர் காணிகளை வனமாக இன்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. கிழக்கிலே இன்று பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்காக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கிறார்கள். மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு ரணிலை ஜனாதிபதியாக்கினால் முஸ்லிம்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் யார் வந்தாலும் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்படாதவரை முஸ்லிம்களுடைய பிரச்சினைக்கு  தீர்வு காணமுடியாது.
இன்று பிரச்சினைகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றது.எந்தப் பிரச்சினையை நாம் இன்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோமோ, உலகெல்லாம் இன்று எங்கெல்லாம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். 
எனவே நாங்கள்தான் பலமுள்ள சமுதாயமாக மாறவேண்டும்.  நாங்கள் அதிகாரமுள்ளவர்களாக மாறவேண்டும்.  எங்களுக்கு   சகல வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அதிகாரம் இல்லை.  நாங்கள் இன்று அமைச்சர்களாக, இராஜாங்க அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக  21 பேர் இருக்கின்றோம். ஆனால் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றோம்.  நாங்கள் அதிகாரம் உள்ளவர்களாக மாறவேண்டும். நாங்கள் அனைவரும் அதிகாரம் உள்ளவர்களாக மாறாதவரை எங்களுக்குரிய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. 
வெறுமனே ஜனாதிபதியை மாற்றி காலத்துக்குக் காலம் எத்தனை பேரை மாற்றினாலும் இதன் மூலமாக எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. 
எங்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. முஸ்லிம் அமைச்சர்களாகிய நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே, கல்விமான்களிடையே, ஊர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் பல குழுக்கள் கொண்டவர்களாக இருக்கின்றோம். இப்படி சமூகம் பிரிந்து செயற்பட்டால் ஒருபோதும் எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.  
பேசுகின்ற சமுதாயமாக மட்டும் நாங்கள் இருக்காமல், எங்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமாக இருந்தால் நாங்கள் அரசியல் ரீதியான, மார்க்க ரீதியான பிரதேச ரீதியான வேறுபாடுகளைக் களைந்து செயற்பட்டு, பலமுள்ள சமுதாய மாறுகின்றபோதுதான் எங்களுடைய பிரச்சினைகளுக்குத தீர்வுகாண முடியும். அந்த அதிகாரமும் எம்மை வந்தடையும் – என்றார். 
ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவரும் நவமணிப் பத்திரிகை ஆசிரியருமான என்.எம். அமீன், எங்கள் தேசம் ஆசிரியர்இ அஷ்ஷெய்க் ஜெம்ஸீத் அஸீஸ், நெலேஜ் பொக்ஸ் பணிப்பாளர் எஸ். ஏ. அஸ்கர் கான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஜுனைத் எம். ஹாரீஸ், தர்கா நகர் கல்வியல் கல்லூரி முன்னாள் உப -பீடாதிபதி கலைவாதி கலீல், மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போர பயிற்சி குழு இணைப்பாளர் ஹில்மி மொஹம்மட், டெய்லி சிலோன் செய்தி ஆசிரியர் அஷ்செய்க் எம். எம். முஹிதீன் ஆகியோர் கருத்தரங்கில் விரிவுரைகளை நடத்தினர்
 கஹட்டோவிட்ட அல் – பத்ரியா, கஹட்டோவிட்ட பாலிகா, உடுகொட அரபா, திஹாரிய அல் – அஸ்ஹர், கள்- எளிய அலிகார், அல்லரமுல்ல சாஹிரா, நாம்புளுவ பாபுஸ்ஸலாம், குமாரிமுல்லை முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் உயர்தர மாணவ, மாணவிகள், பிரதேச அரபுக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 223 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், சியனே ஊடக வட்ட உப – தலைவரும் நவமணி செய்தி ஆசிரியருமான ஸிராஜ் எம். சாஜஹான், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் ஊடகவியலாளர்  எம்.எஸ்.எம். ஸாகிர், ஸ்ரீலங்கா மீடியா போர செயற்குழு உறுப்பினர்கள், சியனே மீடியா சேர்க்கில் நிர்வாகிகள், மாணவர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.