மறிச்சுக்கட்டி மக்கள் மு. காவினரை நோக்கி ஆவேசம்

போராட்டத்தில் ஈடுபடுவர்களை எட்டியும் பார்க்காமல் மூடிய அறைக்குள் கூட்டமா? 

கொடூர வெயிலிலும் கட்டாந்தரையிலும் குந்தியிருந்து மண்ணை மீட்பதற்காக 32 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை வந்து எட்டிப்பார்க்காமல் முசலிக்கு வந்து மூடிய அறைக்குள் கூட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன? மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்கள் முசலிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் எமது மக்கள் நிலங்களை இழந்து தவிக்கும் போது இந்தக் கட்டிடத்தில் இடம்பெறும் கூட்டத்தின் மூலம் உங்களால் தீர்வு பெற்றுத்தர முடியுமா? பாரிய பிரச்சினையொன்றை கொழும்பில் இருந்து எந்த அதிகாரிகளும் வராமல் உங்களால் தீர்வு பெற்றுத்தர முடியுமா? என்று மறிச்சுக்கட்டியில் போராடும் மக்கள் குரல் எழுப்பிய போது அவர்களுக்கு சார்பாக நவவி எம் பி பேச எழுந்த போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவரைப் பேச விடாமல் தடுத்தார். நாங்கள் கருத்துக்களைக் கேட்க இங்கு வரவில்லை என்றும் ஹக்கீம் கூறிய போது அங்கு குழப்ப நிலை எழுந்தது. எனினும் கூட்டத்தை நடத்த வந்தவர்கள் நிலம் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களை சமாளிக்க முற்பட்ட போதும் அது முடியாமல் போய்விட்டது.

வில்பத்து தொடர்பில் இங்கு அதிகாரிகளுக்கு ஆங்கில வகுப்பு நடத்தத் தேவையில்லை, அவர்களுக்கு எல்லம் தெரியும்.இந்தக் கூட்டத்தை போல் பல கூட்டங்களில் அவர்கள் கலந்துள்ளனர். எங்களுக்கு அநியாயம் இடம்பெற்றதையும் இந்த அதிகாரிகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு வக்கில்லாத நீங்கள் இங்கு வந்து எங்களுக்கு படம் காட்ட வேண்டாம் என்று ஆசிரியர் சுபியான் அங்கு தெரிவித்தார்.

வில்பத்துவில் பிரச்சினையில்லையென்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் கூறிவிட்டு இப்போது பம்மாத்துக் காட்ட வந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றார். அவரும் அவரது கூட்டமும் எங்களைக்காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய நினைப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

”முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எமது பிரதேசத்திற்கு வருவதாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். கேவலம் சமூகப் பிரச்சினையொன்றை தீர்ப்பதை விட பத்திரிகைகள் விளம்பரம் போட்டு அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் எம்மை வைத்து பிழைப்பு நடத்துவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். மறிச்சுக்கட்டிக்கு இவர்கள் வருவதையும் நாங்கள் அனுமதிக்குப் போவதில்லை என தௌபீக் மௌலவி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

முசலிப் பிரதேச செயலகத்திலிருந்து வெளியேறிய மக்கள் மறிச்சுக்கடி பாதையில் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.