ஏப்ரல் விடுமுறையில்…

Mohamed Nizous

கூட்டமாய் சிலபேர்
குடும்பமாய் சிலபேர்
நாட்டைச் சுற்றுவார்
நாடியதைப் பார்ப்பார்

அத்தியவசிய சேவையில்
அகப்பட்டுக் கொண்டோர்
இத்தினத்திலும் வேலையா
இல்லாளிடம் படுவார்.

காக்கா தம்பி எல்லாம்
களிப்போடு சுற்றுவதை
ஏக்கமும் இம்சையுமாய்
இரசிப்பார் வெளியில் உள்ளோர்.

செல்லாத இடத்துக்கும்
ஷெல்பியை செற் ஆக்கி
பொல்லாத போஸ்ட் இடுவார்
போக முடியாதோர்.

பள்ளியிலே தங்கியிருந்து
பாடங்கள் படிப்பதற்காய்
உள்ள விடுமுறையை
ஒதுக்குவார் சிலபேர்கள்

படுத்துப் போக்குவார்
படம் பார்த்துப் போக்குவார்
அடுத்தடுத்து போஸ்ட் போட்டு
அனேகம்பேர் முடிப்பார் லீவை

யாவரும் வரும் நேரம்
யாவாரம் நடக்குமென்று
ஆவலாய் கடை திறப்பார்
அங்கிங்கு செல்லார் சிலர்

வீட்டைத் திருத்துவார்
வீலரை பழுது பார்ப்பார்
வார்ட்டிலும் நோயிலுமாய்
வாடுவார் சில பேர்கள்

பிசாசு போல் மறையும்
பெரிய லீவு நாட்கள்
திங்களில் தொடங்கும்
தொங்கலில்லா பிஸி வாழ்க்கை
…!