வழக்குகளை விடவும் கையொப்பங்கள் அதிகமாக இடுமாறு வற்புறுத்தல் செய்கின்றார்கள் : பசில்

இந்த அரசு செய்ய வேண்டிய அனைத்து முட்டாள் தனமான செயற்பாடுகளையும் செய்து வருகின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். 

கொடிகாவத்தையில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

இப்போதைய அரசு நாட்டிற்கு செய்ய வேண்டிய அனைத்து ஊழல் திருட்டு உட்பட முறையற்ற செயற்பாடுகள் என அனைத்து முட்டாள் தனமான காரியங்களையும் செய்து வருகின்றது.

இது நாட்டு மக்களுக்கும் தற்போது தெரிந்து விட்டது. இதுவே எமக்கும் இப்போதைய ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

இது வரைக்காலமும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே என்னை விசாரணைப் பிரிவுகளுக்கு அழைத்திருந்தார்கள். ஆனால் தற்போது சனிக்கிழமைகளிலும் அழைக்கின்றார்கள்.

இப்போது ஒரு இடத்திற்கு மட்டுமல்ல பல இடங்களில் கையொப்பம் இட கூறுகின்றார்கள். நிதி மோசடி விசாரணைப்பிரிவில் 3 ஆவணங்கள் உள்ளன.

வழக்குகளை விடவும் கையொப்பங்கள் அதிகமாக இடுமாறு வற்புறுத்தல் செய்கின்றார்கள். மக்கள் எம்மோடு இருந்தால் நாம் வெற்றி பெற முடியும்.

அது மட்டுமல்லாது மக்கள் வாக்குகளை வாக்குப் பெட்டிக்குள் போட்டது முதல், அதனை சரியாக எண்ணிப்பார்த்து முடிவுகள் கூறும் வரை நாம் அவதானத்துடன் இருக்கா விட்டால் வெற்றி பெற முடியாது எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.