யாழ் செல்லும் ரயிலில்

Mohamed Nizous

கோச்சியிலே போகையிலே
காட்சிகளைக் காணுகையில்
ஆச்சரியம் சில தரும்
பூச்சொரியும் சில மனதில்

தூரத்தில் காணுகின்ற
துலாக் கிணறு சிறு வயதின்
ஊருக் கிணற்றடியை
ஈரமாய் நினைவு தரும்

ஓலைக் குடிசைகள்
ஒன்றிரண்டு கல் வீடு
ஏழைகள் கிராமத்தை
இரசித்துப் பார்க்க வைக்கும்

பின்னோக்கி ஓடுகின்ற
பெயர் தெரியா மரக் கூட்டம்
கண்ணின் மாயை பற்றி
காதில் சேதி சொல்லும்

இத்தனை காடிருந்தும்
இன்னும் காடு வளர்ப்பதேன்
பத்தாம் பசலியாக
பாவி மனம் உள் குடையும்.

பக்கத்து ஆசாமி
பாதி நேரம் போண் பார்த்து
உட்கார்ந்த இடத்திலேயே
உசும்பாமல் இருப்பார்.

காசியப்பன் காலத்தில்
கடையிலே பொரித்த வடை
ஊசிப் போய் இருந்தாலும்
‘உணு’ என்று விற்பான்

பிரயாணி பிராணியாகி
பேசுகின்ற அறிவித்தல்
இரயில் நிலயங்களில்
இடைக்கிடை கடுப்பேற்றும்

கழிவறை செல்வதா
கல் போல இருப்பதா
இழுபறிப் படுகிறார்கள்
இருக்கின்ற நிலை பார்த்து

இரயில் பயணங்கள்
இரசனை மிக்கவை
உறவையும் நட்பையும்
உண்டாக்கக் கூடியவை…!