அமெரிக்க அதிபர் டிரம்ப் வருமான வரி கணக்கு விவர அறிக்கை அம்பலம் !!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடுவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு ஆகும். ஆனால் அந்த மரபுப்படி, தனது வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் கூறி விட்டார்.

இது பெருத்த சர்ச்சையை கிளப்பியது. ஏதோ ஒன்றை டிரம்ப் மறைக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் வழிவகுத்தது.

இப்போது 2005-ம் ஆண்டு டிரம்ப், அமெரிக்க அரசுக்கு செலுத்திய வருமான வரி கணக்கு விவர அறிக்கை என்று 2 பக்க தகவல்களை அந்த நாட்டின் ‘எம்.எஸ்.என்.பி.சி.’ டி.வி. சானல் வெளியிட்டது.

இதில் அப்போது டிரம்ப் தனது வருமானம் 150 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,005 கோடி) என கூறி, 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.254 கோடி) வருமான வரி செலுத்தியது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்த தகவல்களை அந்த டி.வி. செய்தியாளர் டேவிட் கே ஜான்ஸ்டன் வெளியிட்டுள்ளார். பெயர் குறிப்பிடப்படாத ஒருவரிடம் இருந்து இந்த தகவல்களைத் தான் பெற்றதாக அவர் கூறினார்.

இதை வெள்ளை மாளிகை சாடி உள்ளது.

ஆனால் அந்த டி.வி. சானலின் தொகுப்பாளர் ரெய்ச்சல் மேடோவ், “பொதுநலன் சார்ந்த தகவல்களை வெளியிடலாம் என அமெரிக்க அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தத்தின்படியே இது வெளியிடப்பட்டுள்ளது. இது பேச்சுரிமையின் வெளிப்பாடு” என நியாயப்படுத்தினார்.