பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் பொருட்டு மகிந்தவை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு அழைத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்பதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்க நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.