ஹரீஸ் அவர்கள் இன்னும் ஹகீமுடன் ஒட்டிக்கொண்டிருப்பது ஏன்? -செயலாளர் அஸ்ஸுஹூர் கேள்வி

மு. காவின் தற்போதைய தலைவர் ஹகீம், அஷ்ரப் அவர்களின் கால் தூசுக்கும் சமானமில்லை என்று சொன்ன ஹரீஸ் அவர்கள், ஹஸனலி, அன்சில், தாஹிர், தாஜுடீன் போன்ற மானஸ்தர்கள் கட்சியைத் தூய்மைப்படுத்த, ஹகீமிடம் இருந்து விலகிய பின்னரும் இன்னும் ஹகீமுடன் ஒட்டிக்கொண்டிருப்பது ஏன்? என்று கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் கேள்வி எழுப்பினார்.
இனப்பிரச்சிக்கான தீர்வுத்திட்ட யாப்பு மாற்ற யோசனைகளின் போது, அதற்கு சம்பந்தமில்லாத கரையோர மாவட்டம் பற்றி பேசி, விமர்சனத்துக்கு உள்ளான பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு, தான் வானளாவிய அதிகாரங்களுடன் பிரதித்தலைவராக இருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டு தீர்மானங்களில், கரையோர மாவட்டம் பற்றி புறக்கணிப்பு நடந்திருப்பதை, ஒரு ஊடகவியலாளர் மூலமே தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. 
அதுகூட பரவாயில்லை, அப்படி தெரிந்து கொண்டதன் பின்னர், அது விடயமாக இதுவரை அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளேயே கரையோர மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவில்லாத நிலையில், அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து இவர்களால் வெளியிடப்படும் போலி அறிக்கைகளை, மக்கள் இனியும் நம்பி ஏமாறமாட்டார்கள். ஹகீம் அவர்களால் கிழக்கிற்கு எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. எதிர்வரும் தேர்தல்களில் இவர்களுக்கு மக்கள் தகுந்த முறையில் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதில், கிழக்கின் எழுச்சி ஈடுபாடு காட்டுவது, அது முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அலகு அமைக்கப்படுவதற்கான தளமாக இருப்பதற்கான தேவைப்பாடு இருப்பதனாலேயாகும்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து, உடனடியாக ஹஸனலி தரப்பினருடன் இணைந்து, கட்சியைத் தூய்மைப்படுத்துவதற்கான முயற்சியில், தனது பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இறங்க வேண்டும். அவருடன் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களும் இணைய வேண்டும்.
எதிர்வரும் 17ம் திகதி அவரது தலைமையில் கல்முனையில் ‘வேர்களுக்கு விளம்பல்’ கூட்டத்தை ஹரீஸ் மற்றும் ஜவாத் இருவரும் இணைந்து ஏற்பாடு செய்து, தாங்கள் , அஷ்ரப் அவர்களின் கொள்கைகளை முன்னெடுக்கும், கட்சியின் உண்மையான போராளிகள் என்பதையும், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.