அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்த விசேட கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்:அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அரசு நிர்ணயித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த விசேட கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இல்லாவிட்டால் பிரதேச மற்றும்  கால மாற்றங்களின் போது பொருட்களின் விலை மாறுபடுவதை தவிர்க்க முடியாது போகும் எனவும் குறிப்பிட்டார். 
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி அமைச்சின் உற்பத்தி வரிகள் சம்மந்தமான விசேட ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வளமுள்ள நாடாக இலங்கையை மாற்ற வேண்டிய பொறுப்பு நிதி அமைச்சின் மீதே தங்கியுள்ளது. நிதி அமைச்சு இந்தப் பொறுப்பை சரிவர செய்வதற்கான சூழ்நிலைகள் – வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். வெறுமனே வரிகளை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அவ்வாறு உலகில் எந்தவொரு நாடும் முன்னேறியதும் கிடையாது. 
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். 
மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மஹதீர் முஹம்மத் இலங்கைக்கு வந்த போது எமக்கு ஓர் அறிவுரையயை வழங்கியிருந்தார். அதில், “நீங்கள் வெறுமனே கடனை மாத்திரம் பெற்றுக் கொள்வதினாலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் ஊடாகவோ உங்களது நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்நாட்டுக்கு கொண்டு வாருங்கள். அவர்களைக் கொண்டு இப்பிரதேசங்களைக் கட்டியெழுப்புங்கள். தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை, அடிப்படைத் தேவைகளை, பௌதீக கட்டமைப்புக்களை செய்து கொடுத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தான் நிரந்தர முன்னேற்றமாகும்”என்றார். 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏராளமான பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் சுட்டிக்காட்டியிருந்தது. நல்லாட்சி அரசு பெறுப்பேற்றதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், புதிய அரசியலமைப்பு உருவாகும், அதனூடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும், எமது காணிகள் எம்மிடம் மீள ஒப்படைக்கப்படும் என்றெல்லாம் கற்பனை செய்த மக்கள் இன்றும் ஏமாற்றத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இது சம்மந்தமாக உரிய நடவடிக்கையினை அரசு முன்னெடுக்க வேண்டும். 
குறிப்பாக இன்று உணவுப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. அப்பொருட்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு வரும் போது இரட்டிப்பு விலையாகின்றது. சில பொருட்களுக்கு மாத்திரம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து அதனை “சதோச” நிறுவனங்களில் மாத்திரம் தான் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டால், “சதேசா” இல்லாத மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நாங்கள் எங்கு சென்று வாங்குவது? சீனி ஒரு கிலோவிற்காக பொலன்னறுவையில் உள்ள சதோசவிற்கா செல்வது? 
எனவே, எல்லா பகுதிகளும் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அண்மையில் நான் நுவரெலியா சில்மியாபுறத்துக்கு சென்றிருந்த போது அங்கு இரண்டு ரூபா மொத்த விற்பனையில் கோவா ஒரு கிலோ விற்பனை  செய்யப்படுகின்றது. இரண்டு ரூபாவுக்கும் அதனை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயசிகள் அவற்றை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆகவே, இது தொடர்பில் தெளிவான கொள்கையொன்றினை நிதி அமைச்சு வகுக்க வேண்டும். இவ்வாறான திட்டங்கள் வகுக்கப்படுமாயின் மாத்திரமே பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் – என்றார்.