நீதவானின் உத்தரவுக்கமைய துமிந்தவின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே துமிந்த சில்வா,இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் துமிந்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும்  அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் வைத்தியர்கள் வழங்கிய அறிக்கையினை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

துமிந்த சில்வாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு அவரின் உடல் நிலை குறித்து எந்த தடையும் இல்லை என வைத்தியர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

துமிந்த சில்வாவின் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிணங்க விசேட மருத்துவர் குழாமினால், துமிந்தவின் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2010, 2011 மற்றும் 2013 ஆகிய மூன்று வருடங்களாக சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறியமையால் துமிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில், விசாரணை மேற்கொள்வதற்காகவே நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.