அன்றும் இன்றும் – மழை நாளில்

Mohamed Nizous

மின்னல் அடிக்குது
முன்னால் போகாதே
அடி படுவாய் எனும் சத்தம்
இடியாக இறங்கும்

தூசு பிடித்த மண்ணில்
தூறல் மழை வீழ
வாசலெங்கும் புழுதி
வாசனையால் நிரம்பும்

காற்று சுழன்றடிக்க
கீற்று கழன்று விழ
‘உள்ளே.. போ’ என்பார்
உம்மா பாட்ஷாவாய்.

முனு முனுத்து உள் சென்று
மூலையால் வெளிவந்து
கிணுகிணுக்கும் மழை ஒலியை
கேட்பதில் தனி சுகம்.

கூரையால் வழியும் நீர்
கோடாக நிலத்தில் விழ
கை பிடித்து நனைப்பதில்
மெய் மறக்கும் மனசு

கப்பல் கவிழ்ந்து விழ
காப்பாற்ற முன் பாய
தொப்பலாய் நனைந்த தலை
துடைப்பார் ராத்தாமார்.

அன்று பெய்த மழை
இன்றும் பெய்கிறது.

போணை ஓப் பண்ணு
பொங்குகிறார் உம்மாமார்.
காணாத முறையினிலே
போணையே பார்க்கிறார்.

கூரையில் விழுந்த மழை
குழாய்க்குள் போயிடுச்சு.

கொங்ரீட்டில் பெய்த மழை
கொஞ்சமும் வாசமில்லை.

சுழன்று காற்றடித்தும்
கழன்று விழக் கீற்று இல்லை…!