கிழக்கின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸிற்கான புதிய யாப்பு எழுதப்படுகின்றது : அஸ்ஸுஹூர்

பரபரப்பாக உருவாக்கப்பட்ட கிழக்கின் எழுச்சி அண்மையில் ஆரவாரமில்லாது இருக்கின்றது. இது பற்றி தற்போது இந்தியாவில் இருக்கும் அதன் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் இடம் வினவியபோது.
கேள்வி : கிழக்கின் எழுச்சி கிடப்பில் போடப்பட்டு விட்டதா? தற்போது ஏதும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில் : முஸ்லிம் காங்கிரஸ் தனது தனித்தலைமையை விட்டும், மஷூரா அடிப்படையில் அமைந்த முடிவுகளை எடுக்கும் கூட்டுத் தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கிழக்கின் எழுச்சி தொடர்ந்தும் கூறி வந்துள்ளது.
இதற்கு உரம் சேர்க்கும் வகையில் கிழக்கின் எழுச்சி மு. கா வுக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தோம்.
இதற்கமைய, தான் தோன்றித்தனமாகவும், சர்வாதிகாரப் போக்குடனும் நடக்கக் கூடிய தனித் தலைமையை அகற்றி, பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபட முடியாத நிபந்தனையை உறுதிப்படுத்தி, ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சமூக சிந்தனையுள்ள, பொருத்தமான, தகுதியான நபர்களைக் கொண்டு உருவாக்கப்படும் தலைமைத்துவ சபையிடம் கட்சியின் உச்ச அதிகாரங்கள் கையளிக்கப்படும் வகையில், ஒரு புதிய யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தலைமைத்துவ சபையில் உள்ளவர்கள் எந்தவொரு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது. தேசிய பட்டியல் மூலமாகவும் பிரதிநிதித்துவ அரசியலில் நுழைய முடியாது.
கேள்வி : பிரதிநிதித்துவ அரசியலில் நுழைய முடியாது என்றால், அதில் பங்கேற்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் அல்லவா?
பதில் : யார் ஆர்வம் காட்ட மாட்டார்கள்? பிரதிநிதித்துவ அரசியலில் நுழைந்து பணம் சேர்க்க நினைப்பவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதுதானே நமக்கு வேண்டும்.
கேள்வி : யாப்புருவாக்கம் எந்த நிலையில் உள்ளது?
பதில் : இது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. 
கேள்வி : நீங்கள் உருவாக்கியுள்ள இந்த யாப்பை எவ்வாறு மு.கா ஏற்றுக் கொள்ளும்?
பதில் : அதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அனைத்து உயர் பீட உறுப்பினர்களுக்கும் அனுப்பவுள்ளோம். அது மட்டுமல்லாது, எங்களால் முடிந்தளவு ஏனைய உறுப்பினர்களுக்கும், சகல பள்ளி வாசல் களுக்கும் அனுப்பி, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி நடைபெற உள்ள மு.கா வின் பேராளர் மாநாட்டில், கட்சியின் புதிய யாப்பாக இதனை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட வேண்டிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவுள்ளோம்.
கேள்வி : நீங்கள் உருவாக்கியுள்ள யாப்பு நிச்சயம் அவர்களுக்கு நடை முறை சிக்கல்களை ஏற்படுத்தும் அல்லவா?
பதில் : இதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. இதன் அடிப்படை எண்ணக்கரு சிதைவடையாதவாறு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு இதனைப் புதிய யாப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே கோருகின்றோம்.
கேள்வி : இந்த புதிய யாப்பின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மை என்ன?
பதில் : இதனை அமுல்படுத்த முடிந்தால், இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு உறுதியானதும், நம்பிக்கையும், நன்மையும்  அளிக்கக்கூடியதான ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் உருவெடுக்கும். சிதறுண்டு போயுள்ள ஆளுமைகளை ஓரணியில் திரட்டவும் இது உதவும். 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் உருவாக்கியுள்ள ஆபத்தான நிலையில், முஸ்லிம்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி தேவைப்படுகின்றது. முன்பாவது எதிரி கண் முன்னே தெரிந்தான். இப்போது யார் யார் எமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை.  
இதனை முஸ்லிம்களின் நலனில் பாரிய பங்களிப்பு செய்யக்கூடிய பேரியக்கமாக மீண்டும் மாற்றுவதுதான், இக்கட்சியை உருவாக்குவதில் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள் என்ற வகையில் எமது அவா.
கேள்வி : மு. கா இதனை ஏற்றுக்கொள்ளாது போனால் என்ன நடக்கும்?
பதில் : இந்த யாப்பை அமுல்படுத்த முடியாது போனால், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி வரலாறாகிப் போவதை தடுக்க முடியாது போகும்.
கேள்வி : முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் நீங்கள் கேட்டுக் கொள்வது என்ன?
பதில் : கிழக்கின் எழுச்சி உருவானபோது, இது முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்காக வந்துள்ளது என்று கூறப்பட்ட வதந்தியை நம்பியது போல் அல்லாது, இப்புதிய யாப்பில் நாம் கூறியுள்ள விடயங்களை அலசி ஆராய்ந்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வுசெய்து தத்தமது ஊர்களில் உள்ள உயர் பீட உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மீதுள்ள செயலாண்மையற்ற பாமரர்கள் எனும் அவப்பெயரை நீக்கிக் கொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பம் ஆகும்.
கேள்வி : இன்றைய இளைஞர்கள், இந்த அனைத்து காங்கிரஸ்களையும் விடுத்து ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து முகநூல் உட்பட பல இடங்களில் எழுதி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தனது போக்கில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த தவறுமிடத்து, நீங்கள் உருவாக்கியுள்ள இந்த யாப்பைக் கொண்டு அனைவரும் விரும்பும் அந்த புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் எண்ணம் உள்ளதா?
பதில் : அதில் எங்களுக்கு ஆர்வமில்லை. அந்த நிலைமை ஏற்படுமுன் முடிந்தளவு முஸ்லிம் காங்கிரஸை சீர்படுத்தவே விரும்புகிறோம். இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.