ஒன்றுமில்லாமல் அரசியலுக்கு வந்து உங்களைப்போல நான் சொத்து சேர்த்தவன் அல்ல: நிதியமைச்சர் ஆவேசம்

நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பாராளுமன்றத்தில் எவரும் விளையாட நினைக்க வேண்டாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

கூட்டு எதிர்க்கட்சியினர் வேண்டும் என்றே அடுத்தவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தமது குற்றங்களை மறைத்துக் கொள்கின்றார்கள்.

நான் பாராளுமன்றத்திற்கு வரும் முன்னரே வீடு அமைத்து விட்டேன். ஊழல் செய்து எதனையும் நான் சம்பாதிக்கவில்லை அதற்கான தேவையும் இல்லை. 

இவர்கள் சொல்லுவதனைப்பார்த்தால் பிச்சைக்காரர்களாக இருக்கவேண்டும் போல. ஏற்கனவே தேடிய சொத்துகள் என்னிடம் உள்ளன.

அந்த சொத்து விபரங்களை பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன். முறையாக வரிகளை கட்டியும் நேர்மையான முறையில் சேர்த்தவை அவை இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

ஒன்றுமில்லாமல் அரசியலுக்கு வந்து உங்களைப்போல நான் சொத்து சேர்த்தவன் அல்ல என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

விமல், பந்துல, வாசுதேவ போன்ற அனைவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

உங்கள் அனைவருக்கும் ஒன்று கூறுகின்றேன் போலியான விமர்சனங்களை எழுப்ப வேண்டாம். பொய்யாக சேறு பூசுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாராளுமன்றம் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகின்றது பொய்களை பேசி விளையாட நினைக்க வேண்டாம் எனவும் நிதியமைச்சர் ஆவேசத்தோடு எச்சரிக்கையினையும் விடுத்தார்.