ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது. 

உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

இதன்படி, 2015ம் ஆண்டில் வௌியிடப்பட்ட உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு பட்டியலில் (The Corruption Perception Index) 37 புள்ளிகளைப் பெற்ற இலங்கை 168 நாடுகளுக்குள் 83வது இடத்தை பெற்றுக் கொண்டது. 

எனினும், இம்முறை (2016 ஆண்டில்) இந்தப் பட்டியலில், 175 நாடுகளுக்குள் இலங்கை 95வது நாடாக பதிவாகியுள்ளது. மேலும் இலங்கைக்கு இம்முறை 36 புள்ளிகளே கிட்டியுள்ளன. 

இதேவேளை, உலகில் ஊழல் அற்ற நாடுகள் பட்டியலில் 90 புள்ளிகளைப் பெற்றுள்ள டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. 

மேலும் பின்லாந்து, சுவிடன் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3ம், 4ம் மற்றும் 5ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன. 

மேலும் இந்தப் பட்டியலின் படி, அண்டை நாடான இந்தியா 79வது இடத்தை பெற்றுள்ளதோடு, தெற்காசிய நாடுகளில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.