புத்தளத்தில் மினி தாருஸ்ஸலாம், கிழக்கில் பொடி தாருஸ்ஸலாம் அமைக்கப்படுமா ?

 சில நாட்கள் முன்பு மு.கா புத்தளத்தில் தாருஸ்ஸலாம் கிளை அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தது.இது 24மணி நேரமும் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டமையே அதன் சிறப்பம்சமாகும்.இது மக்கள் தொடர்பாடலுக்கான சிறந்த முறை என்பதில் ஐயமில்லை.

இது போன்று கிழக்கிலும் அமைக்கப்படுமா என்பது தான் கிழக்கு மக்கள் அனைவரது மனதிலும் சில நாட்களாக அடிக்கடி வந்து செல்லும் வினாவாகும்.புத்தளத்தில் தாருஸ்ஸலாம் கிளை அலுவலகம் அமைத்து அதற்கு பொறுப்பாக ஹசனலியை  நியமிக்க முடியுமாக இருந்தால் ஏன் கிழக்கில் முடியாது?

கிழக்கிலும் இவ்வாறான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு கிழக்கு மக்களை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான இலகு வழி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அலுவலகம் அமைக்கப்படுவதோடு அம்பாறை மாவட்டத்தில் கிழக்கின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மு.காவின் முக்கிய அரசியல் பதவிகளில் உள்ள முதலமைச்சர்,மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் போன்றோர்  குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது குறித்த மாவட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.இதன் மூலம் மு.காவின் அரசியல் பதவி வகிப்பவர்களின் சேவைகள் அனைத்து  இடங்களிற்கும் பரவலாக கிடைக்கும்.

கிழக்கு முதலமைச்சர் அம்பாறை மாவட்டத்தின் பக்கம் வருவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் இதன் மூலம் நிவர்த்திக்கப்படும்.

இன்று அ.இ.ம.காவானது வளர்ச்சி கண்டிருந்தாலும் அதன் ஆதரவாளர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்ப்பிப்பதில் அதன் தலைவர் அமைச்சர் றிஷாத் மாத்திரமே அதிக கவனம் செலுத்துகிறார்.இதன் காரணமாக அவர் பாரிய சுமைகளை தன் மீது கொண்டுள்ளார்.இது போன்று அவர் செய்வதன் மூலம்,தன் மீதுள்ள பாரிய சுமைகளை அவரால் குறைத்துக் கொள்ள முடியும்.

மாவட்ட மற்றும் பகுதி ரீதியான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் போது அடிமட்ட மக்களின் குறைகளை கூட நிவர்த்திக்க ஏதுவாக அமையும்.

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

சம்மாந்துறை.