காட்டி மறைத்தல் (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்றாஸ்)

பிள்ளைகளுக்கு ஊசி போடுவதற்காக அல்லது மருந்தைப் பருக்குவதற்காக, அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் உத்தியாக, மனதைக் கவரும் அழகான விளையாட்டுப் பொருட்கள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு தடவையும் பிள்ளைகள் அழும்போது அன்றேல் அடம்பிடிக்கும் போது காட்டி மறைப்பதற்காக அல்லது எத்திவிளையாடுவதற்காக அப்பொருட்கள் வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்குமே தவிர, இவை ஒருபோதும் பிள்ளைகளின் கையில் நிரந்தரமாக கொடுக்கப்படுவதில்லை. இதுபோலத்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை என்ற பதவியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையாண்டு கொண்டிருப்பதாக தெரிகின்றது. செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி மட்டுமன்றி அப்பதவிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு தனிநபரும் பிரதேசங்களும் இந்த காட்டிமறைத்தலால் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் கடந்த மாதம் இடைக்கால இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. ஹசனலி, தனது பதவி சூசகமான முறையில் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து, ஹசனலியை திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்கு ஹக்கீம் தள்ளப்பட்டிருந்தார். இல்லையென்றால் கட்சியின் நடவடிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவால் முடக்கப்படும் நிலையும் இருந்தது. இதனை தவிர்ப்பதற்காக ஹசனலிக்கு அடுத்த பேராளர் மாநாட்டில் யாப்புத் திருத்தத்தை மேற்கொண்டு அதிகாரங்களை மீள ஒப்படைப்பது எனவும் அதுவரையும் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை அவருக்கு கொடுப்பது என்றும் ஹக்கீம் கூறியிருந்தார். எம்.பி. பதவியை பிணையாக வைத்துக் கொண்டு சமரசமாகிப் போவதற்கு ஹசனலியும் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த உடன்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையிலும் இருவரும் மீள ஒப்புவித்திருந்தனர்.

அடுத்தடுத்த வாக்குறுதிகள்

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை டிசம்பர் 16ஆம் திகதி சந்திக்கச் சென்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானின் இராஜினாமாக் கடிதம் அடங்கிய கோவை ஒன்றை ஹக்கீம் ஹசனலியின் கையில் கொடுத்ததாகவும், அது 16ஆம் திகதி இடப்பட்டிருந்ததாகவும் ஹசனலி கூறுகின்றார். ஆனால், அந்தக் கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பதும் சல்மான் அப்பதவியில் தொடர்ந்தும் இருக்கின்றார் என்பதும் பின்னர் தெரியவந்தது. முன்னதாக, ஹசனலியிடம் 16ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தை கொடுத்திருந்த ஹக்கீம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ‘சல்மான் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அப்பதவியில் இருக்கலாம்’ என்று முரணான விதத்தில் கருத்து வெளியிட்டுமிருந்தார்.
அதன் பின்னர், ஜனவரி 2ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை வழங்குவதற்கான தனது தீர்மானத்தை விலாவாரியாக ஹக்கீம் அறிவித்திருந்தார். ஆகவே, தலைவர் நன்றாக பட்டுணர்ந்து, இதயசுத்தியுடன் தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றப் போகின்றார் என்றே கட்சியின் ஆதரவாளர்கள் கருதினர். அதன்படி ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் ஹசனலி சத்தியப்பிபரமாணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஆனால், 9ஆம் திகதியும் அது நடக்கவில்லை. மாறாக, சல்மான் எம்.பி. வெளிநாட்டுப் பயணம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அவர் பதவியை இராஜினாமா செய்யாமல் இழுத்தடிக்க முனைகின்றார் என்றும், அவ்வாறு இராஜினாமா செய்வதாயின் உயர் பதவியொன்றை பகரமாக கேட்கின்றார் என்றும் கட்சிக்குள் இருந்து தகவல்கள் கசிந்திருந்தன. ‘இல்லை இல்லை சல்மான் நாட்டில்தான் நிற்கின்றார், இது ஒரு நாடகம்’ என்று கூறியவர்களும் உள்ளனர். இதற்கிடையில் ‘தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்ற ஒரு நூலும் வெளியாகியிருந்தது.

 

எனவே, நிலைமைகளை இப்படியே விட முடியாது என்பதையும், ஹசனலியை தொடர்ந்தும் நம்பிக்கையுடன் குளிர்வித்து வைத்திருக்க வேண்டுமென்றும் எண்ணிய மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் கடந்த 10ஆம் திகதி ஹசனலியை தாறுஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினார். இருவரும் மனம்விட்டுப் பேசியுள்ளனர். சல்மான் வெளிநாடு சென்று திரும்பியதும் 16ஆம் திகதி உடனடியாக இராஜினாமா செய்வார். 17ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடலாம் என்று ஹக்கீம் கூறியதை ஹசனலி நம்பியுள்ளார்.
அதன்பிறகு புத்தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 15ஆம் திகதி தலைவருடன் செயலாளரும் கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்து திரும்புகையில் ‘நாளை காலை உங்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பேன்’ என்று கூறிய தலைவர் ஹக்கீம் இக்கட்டுரை எழுதப்படும் வரை தனக்கு எவ்வித தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்ளவில்லை என்று ஹசனலி கூறுகின்றார். நாட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படும் சல்மான் எம்.பி.யும் உத்தியோகபூர்வமாக எம்.பி. பதவியை இராஜினாமாச் செய்யவில்லை என்று அறிய முடிகின்றது. இது பல்வேறு சந்தேகங்களுக்கும் வேண்டாத விளைவுகளுக்கும் இட்டுச் செல்கின்றது.

முதற்கோணல்

ஆரம்பத்தில், தேசியப்பட்டியல் எம்.பி.க்காக கட்சிக்காக உழைத்த எத்தனையோ தனிநபர்களும் பிரதேசங்களும் தவங்கிடக்க, தற்காலிக எம்.பி.க்களாக தனது சகோதரரையும் நண்பரையும் நியமித்தது ஒரு நல்ல முன்னுதாரணம் அல்ல. அதுவும் இருவாரங்களுக்கு தற்காலிகமாக என்று சொல்லிவிட்டு 20 வாரங்களாக ஒரு எம்.பி.யை அப்பதவியில் விட்டுவைத்திருந்தமையும், 13 மாதங்களாக மற்றைய தற்காலிக எம்.பி.யை நீடிக்கச் செய்திருக்கின்றமையும் எந்தக் காரணங்களின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

 

இப்போது, இந்த எம்.பி.பதவியை, கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கா அல்லது அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கா வழங்குவது என்பது, இரண்டாவது பிரச்சினையாகும். முதலாவது பிரச்சினை இன்னும் சல்மானை இராஜினாமாச் செய்ய வைக்காமல் இருக்கின்றமையாகும். அந்தக் காரியத்தை செய்து முடித்து, யாராவது பொருத்தமான ஒருவருக்கு அப்பதவியை கொடுக்காமல் பிச்சைக்காரனின் புண்ணைப்போல இதை வைத்திருப்பதாலேயே இன்று ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறாது போய்க் கொண்டிருக்கின்றது. மட்டுமன்றி, அற்பத்தனமான பதவிச் சண்டையில் கட்சியில் எல்லோரும் மூழ்கித் திளைத்திருக்கின்றமையால் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமான தேசிய அடிப்படையிலான விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு மு.கா.வினால் முடியாதிருக்கின்றது.

கூட்டாக ஏமாறுதல்

தேர்தல் ஆணைக்குழுவில் செயலாளர் நாயகம் செய்த முறைப்பாட்டினால் கட்சிக்கு ஏற்படக் கூடிய சவால்களை தணிப்பதற்காகவே ஹசனலிக்கு எம்.பி. கொடுப்பதான அறிவிப்பை தலைவர் விடுத்திருந்தார். இருப்பினும், ஹசனலியை தலைமைத்துவம் தொடர்ந்தும் ஏமாற்றப் போகின்றது என்று அவருக்கு நெருக்கமான பலரும் எச்சரித்து வந்தனர். ஆயினும், ஹசனலி கடந்த 16ஆம் திகதி வரையும் தலைவரின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை பெருமளவுக்கு கெடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகின்றது. அதற்கு காரணங்களும் பட்டவர்த்தமானவையே.

 

ஏதாவது ஒன்றை நமக்கு தருவதாகச் சொல்லி ஒருவர் இழுத்தடிக்கின்றார் என்றால் அதனை நாம் ஏமாற்றுதல் என்றே சொல்வோம். கடைசியில் எப்போதாவது ஒருநாள் அவர் அதனை நமக்கு தந்தாலும் அவர் ஏமாற்றியது ஏமாற்றியதுதான். அதுபோலவே, அஷ்ரஃபின் கொள்கையில் உள்ள மு.கா. முக்கியஸ்தர்கள் இவ்விடயத்தையும் நோக்குகின்றனர். தேசியப்பட்டியலில் முக்கியமான ஊhர்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை முன்மொழியாததன் மூலம் அவ்வூர்கள் ஏமாற்றமடைந்தன. தவங்கிடந்த தனிநபர்கள் இலவுகாத்த கிளிகளாகினர், தற்காலிக நியமனம் இழுத்தடிக்கபட்டதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இப்போதாவது அட்டாiளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கோ அன்றேல் தனிநபர்களுக்கோ அதைக் கொடுக்காமல் காட்டிமறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

இது ஹசனலி விடயத்திலும் பொருந்தும். 2016 டிசம்பர் 16ஆம் திகதியிடப்பட்ட கடிதத்;தின்;படி சல்மான் பதவி விலகாமையால் இந்த சீசனில் அவர் முதன்முதலாக ஏமாற்றப்பட்டார். அதன்பிறகு ஜனவரி 9ஆம் திகதி என வழங்கப்பட்ட வாக்குறுதியும், பின்னர், 16ஆம் திகதி என்று சொல்லப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததன் மூலம் ஹசனலி ஏமாறிக் கொண்டிருக்கின்றார். இதை அவர் நன்றாக உணர்ந்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இனி இப்படியொரு பதவி தனக்கு தேவையா என்று சிந்திக்கும் நிலைக்கும் அவர் வந்திருக்கக் கூடும். ஒருவேளை இப்பதவி தேவையில்லை என்று அவர் சொல்லலாம் என்றாலும் வழங்காத பதவியை தேவையில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

 

எவ்வாறாயினும், இவ்வார இறுதிக்குள் சல்மான் எம்.பி. உண்மையிலேயே இராஜினாமாச் செய்து, 24ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது எம்.ரி. ஹசனலி எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கின்றது. இருப்பினும், அவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூன்று கட்டங்களாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் மட்டுமல்ல, இந்த தேசியப்பட்டியல் எம்.பி.க்காக அறிக்கை விடும் தனிநபர்கள், நீண்டகாலமாக காத்திருக்கும் ஊர்கள், தலைவரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்ற வாக்காளப் பெருமக்கள் எல்லோரும்தான் இந்த காட்டி மறைத்தலால் மனம் வெறுத்துப் போயுள்ளனர்.

காரணம் என்ன?

அப்படியென்றால், இத்தனை தரப்பினரையும் பொருட்படுத்தாமல், சல்மானிடம் இருந்து அந்த எம்.பி. பதவியை தலைவர் ஹக்கீம் மீளப் பெறாமல் இருக்கின்றார் என்றால் அதற்கு இதைவிடவும் பெரிய காரணங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டும் திண்ணம்.
அந்தவகையில், இவ்வாறு தேசியப்பட்டியல் எம்.பி.யை காட்டிமறைத்துக் கொண்டு இழுத்தடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, சல்மான் எம்.பி. இப்பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதற்கு பகரமாக தனக்கு ஏதாவது ஒரு உயர் பதவியை கேட்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அது உண்மையாயின், இப்போதைக்கு கைவசம் அப்படியான எந்தப் பதவியும் இல்லாமையால் தலைவர் ஹக்கீமினால் அதை மீளப் பெறுவதில தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இரண்டாவதாக, சல்மானிடம் தலைவர் சூழ்நிலைக் கைதியாக இருக்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றது. இப்படியான காரணங்கள் ஏதுமிருப்பின் அதை ஹக்கீம் நன்றாகவே அறிந்திருப்பார். ஆனால், தனது நம்பிக்கைக்குரிய நபர் என்று சொன்னவர் இப்படிச் செய்கின்றார் என்று அவரால் வெளியில் சொல்ல முடியாது.

 

அதேவேளை, தலைவரும் சல்மான் எம்.பி.யும் சேர்ந்து இந்த கதை திரைக்கதையை எழுதி நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஹசனலிக்கு இப்படியே நம்பிக்கை காட்டியவாறு கொஞ்சக்காலத்தை இழுத்துச் செல்வதே இதன் நோக்கம் என்றும் ஒரு தரப்பு சொல்கின்றது. எனினும், தேர்தல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை ஹசனலி எழுத்து மூலம் வாபஸ் பெறவில்லை என்பதுடன், ஆணையாளரின் முன்னிலையிலேயே இணக்கம் காணப்பட்டது என்பதையும் ஹசனலியை ஏமாற்றுவது ஆணைக்குழுவை பேய்க்காட்டுவது போன்றது என்ற அடிப்படையிலும் நோக்கினால், தலைவர் ஹக்கீம் அவ்வாறு ஒரு நாடகத்திற்கு துணை போக மாட்டார் என்றே கணிக்க முடிகின்றது.

 

இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான காரணம் இருக்க முடியும். அதாவது, தலைவருக்கும் செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான உறவில் கீறல் விழுந்துவிட்டது. இப்போது ஹசனலிக்கு எம்.பி. பதவியைக் கொடுத்தால் அவருக்கு பிரதியமைச்சு பதவி ஒன்றும் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. அப்படியான ஒரு சூழலில் பேராளர் மாநாட்டை முன்னிட்டு கட்சிக்குள் இருக்கின்ற உறுப்பினர்களில் ஒரு தொகுதியினரின் ஆதரவை ஹசனலி தரப்பு எடுத்துக் கொள்ளலாம். பதவியும் அதிகாரமும் இருப்பதால் மிக இலகுவாக சிலர் ஒட்டிக் கொள்வார்கள். அவ்வாறு நடந்தால் யாப்புத் திருத்தத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது தலைமைத்துவத்திற்கு சவாலான காய்நகர்த்தல்களோ ஹசனலி தலைமையில் மேற்கொள்ளப்படும் சாத்தியம் குறித்து ஹக்கீம் அச்சப்படக் கூடும். அத்துடன் ஹசனலிக்கு எம்.பி.யை கொடுத்துவிட்டால் சில பிரதேசங்களை சேர்ந்த நான்கைந்து உயர்பீட உறுப்பினர்கள் கொஞ்சம் மனமுடையவும் வாய்ப்பிருக்கின்றது.

 

எனவே, அடுத்த பேராளர் மாநாடு நடைபெறும் வரைக்கும் இப்பதவியை செயலாளர் நாயகத்திற்கு கொடுப்பதில்லை என்றோ அல்லது செயலாளர், தவிசாளர் போன்றோருக்கு ஒரு பாடம் படிப்பித்துவிட்டோ, மாநாட்டின் பெறுபேறுகளைப் பார்த்துவிட்டோ யாருக்கு எம்.பி.யை கொடுப்பது என்பதை தீர்மானிப்போம் என்று தலைவர் நினைத்திருக்கக் கூடும். சுருங்கக் கூறின், இந்த எம்.பி. பதவி தொடர்பாக அக்கறை கொண்டுள்ள எல்லா தரப்பினரையும் பேராளர் மாநாடு வரைக்கும் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான ஒரு கருவியாக இந்த தேசியப்பட்டியல் பயன்படுத்தப்படலாம். இதற்கு மேலதிகமாக, ஹசனலிக்கு எம்.பி. கொடுப்பதாக ஹக்கீம் அறிவித்த தீர்மானத்திற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பலைகளின் காரணமாகவே இவ்வாறு இழுத்தடிக்கின்றார் என்று கருதுவது கடினம்.
எது எவ்வாறிருப்பினும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டாக வேண்டும். இதை ஒரு சர்வதேச முக்கியத்துவம் மிக்க விவகாரம் போல ஆக்கிவிடக் கூடாது. இந்த தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகள் என்பது கிழக்கு மக்கள் அளித்த வாக்குகளுக்கு சன்மானமாக கிடைத்தவை ஆகும். எனவே மு.கா.வின் தலைவர் றவூப் ஹக்கீம் மிகச் சாணக்கியமான முறையில் அப் பதவியை எம்.எச்.எம்.சல்மானிடம் இருந்து மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை செயலாளர் நாயகத்திற்கு வழங்குவதா? அல்லது காத்திருக்கின்ற அட்டாளைச்சேனை போன்ற ஊர்களில் ஒன்றுக்கு அதைக் கொடுப்பதா என்பதை பிறகு பார்க்கலாம். முதலாவதாக, அதை பெறவேண்டும்.

வேறு எந்தப் பொல்லாப்புமில்லை!

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 22.01.2017)