நட்ஸ் ஆரோக்கியமானதுதான். ஆனால், அளவுக்கு மீறி எடுத்தால்…..

தினமும் வால்நட் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என பி.எம்.ஜெ ஓப்பன் டயாபடீஸ் ரிசர்ச் அன்ட் கேர் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், 112 பேருக்கு, தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு வால்நட் கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து இவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில், மொத்தக் கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவு குறைந்திருந்ததை கண்டறிந்தனர். நல்ல கொழுப்பு அளவு மிக அதிகமாக இருந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் எடுத்துக்கொள்வதும் ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

நட்ஸ் ஆரோக்கியமானதுதான். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு கையளவு சாப்பிட வேண்டும் என்ற அளவுகளை மறந்து சிலர் அதிகம் எடுத்துக்கொள்வதும் உண்டு. இப்படி, அளவுக்கு மீறி எடுத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா?

அதிகமாக நட்ஸ் சாப்பிடும் போது அதில் உள்ள பைட்டிக் அமிலம், இரும்புச்சத்து கிரகிப்பதை தடைசெய்துவிடும். அன்றைய தினம், என்னதான் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்தாலும், பைட்டேட்ஸ் சத்தானது காரணமாக எந்த பலனும் இல்லாமல் போகலாம். இதனால், சோர்வு, அனீமியா உள்ளிட்ட பாதிப்பு ஏற்படலாம்.

குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் நட்ஸ் சாப்பிடும்போது, கலோரி அளவு அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமான கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரித்து வைக்கப்படும். எனவே, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை திடீரென அதிகரித்துவிடும்.

நட்ஸ் செரிமானம் ஆக தாமதம் ஆகக்கூடிய உணவுப்பொருள். இதில் உள்ள பைட்டேட்ஸ் மற்றும் டேனின் சத்துக்கள் வாயுக்களை உருவாக்கி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தலாம். இதில், அதிக அளவு கொழுப்புச்சத்தும் உள்ளது. இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த காரணமாகிவிடும்.