ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் என்ற கோரிக்கையை மோடி ஏற்கவில்லை;போராட்டம் தீவிரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழர்களின் உணர்வுகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை எடுத்துரைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது, ஜல்லிக்கட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பாராட்டிய மோடி, இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அதேசமயம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார். 

தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு வரும் என்றும், வறட்சியை சமாளிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.

எனவே, இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் என்ற கோரிக்கையை மோடி ஏற்கவில்லை. ஏற்கனவே கூறியதுபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வந்தபிறகுதான் மத்திய அரசு தனது முடிவினை தெளிவுபடுத்தும். மோடியின் இந்த முடிவினால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடியின் இந்த பதில் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று போராட்டக் களத்தில் இருக்கும் பலர் கூறுகின்றனர்.