இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க விடாமல் விரட்டினர்; இப்போது ஆசைவார்த்தை கூறி அவர்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள்..

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா கட்சியை வழி நடத்த வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக சென்று ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அப்போது தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தொண்டர்கள் ஏராளமானோர் நான்தான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

விரைவில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளேன்.

பல பேர் பலவிதமாக பேசி வருகின்றனர். யாருடைய கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கேள்வி:- எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு நீங்கள் சென்ற போது அதிக கூட்டம் காணப்பட்டதே?

பதில்:- அதுதான் எனக்கும் வியப்பாக இருந்தது. அங்கு வந்த தொண்டர்கள் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு இல்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

கே:- ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இல்லை என்று திடீரென தெரிவித்து இருக்கிறீர்களே?

ப:- அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் மருத்துவமனை உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ன நடந்தது என்பது எதுவுமே தெரியவில்லை.

சிகிச்சை குறித்து தெளிவான விவரங்களை வெளியிட வேண்டும் என்று சொன்னதில் மாற்று கருத்து கிடையாது.

அப்பல்லோ நிர்வாகம் சிகிச்சை விவரங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும்.

கே:- ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரும் எனக்கு குழந்தைகள் போன்றுதான் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சசிகலா கணவர் நடராஜன் கூறி இருக்கிறாரே?

ப:- இத்தனை நாட்களாக நடராஜன் எங்கே சென்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கூட என்னை பங்கேற்க விடாமல் விரட்டி அடித்தனர். இப்போது ஆசைவார்த்தை கூறி என்னை அவர்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள். தற்போது மக்கள் ஆதரவு எனக்கு பெருகி உள்ளது. ஏராளமான தொண்டர்கள் நான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனை பார்த்துதான் அவர் அரசியல் செய்கிறார்.

கே:- உங்கள் ஆதரவாளர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

ப:- நம்பிக்கையோடு இருங்கள் நல்ல முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு தீபா கூறினார்.