இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தைக்கு வந்தபின்னர் அரிசியின் விலை மேலும் குறையும்: அமைச்சர் ராஜித

அரிசியின் விலை சந்தையில் தற்பொழுது குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தைக்கு வந்தபின்னர் அரிசியின் விலை மேலும் குறையும் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் எதிர்வரும் நெல் அறுவடைக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலேயே தற்போது அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது புறக்கோட்டை சந்தையில் 1 கிலோ அரிசி 80 ரூபா தொடக்கம் 82 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் கூறியுள்ளார்.

சில வர்த்தகர்களினால் முடக்கிவைக்கப்பட்டிருக்கும் அரசி கையிருப்பு விலை வீழ்ச்சியை அடுத்து சந்தைக்கு வரும். அப்பொழுது மேலும் அரிசியின் விலை வீழ்ச்சியடையும்.

பொதுமக்களின் நன்மை கருதியே நாம் அரிசி இறக்குமதியை மேற்கொண்டோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.