ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் நிராகரித்துள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார்.

லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில் தொடர்ந்து நீடிப்பது, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை வகுப்பதில் இடம்பெறாமல், அவற்றை ஏற்றுகொள்வதற்கு சமமானதாகும் என்று அவர் தெரிவித்தார்.

சுங்க வரி விதிப்பு ஒன்றாக இருக்கும் ஒரு நிலை குறித்து பேசிய அவர், இதில் முழு உறுப்பினர் என்ற நிலை, பிரிட்டன் அதனுடைய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளில் உருவாக்கி கொள்வதை தடுக்கும் என்று தெரிசா மே கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய சந்தையை பிரிட்டன் இழந்தால் மாற்று நடவடிக்கை

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தோடு வரியில்லா சுதந்திர வர்த்தகத்தை உருவாக்க விரும்புவதாக கூறிய தெரீசா மே, இரு தரப்புக்கும் நன்மை அளிக்கக்கூடிய விதமாக இந்த ஒப்பந்தத்தை அடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

படிப்படியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையால் வர்த்தகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தவிர்க்க முடியும் என்றும், ஆனால் வரம்பற்ற இடைக்கால நிலையை பிரிட்டன் ஏற்றுகொள்ளாது என்றும் தெரீசா மே தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் விலகினால் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துவிடும்: சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர்

அதிக குடியேறிகள் வந்தபோது, அந்த அமைப்புக்கான பொது மக்களின் ஆதரவு குறைந்ததால் குடியேற்றத்தை பிரிட்டன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்கும் பெருந்தொகையை இனி பிரிட்டன் வழங்காது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், அதற்கு மட்டும் பங்கு வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் வெற்றியடைவதில் பிரிட்டனின் கட்டாயமான நலன்கள் இருப்பதாக அவர் கூறினார்.

– BBC – Tamil