அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலமிற்கு மாற்றினால் மோசமான விளைவுகளை உருவாக்கும் – பிரான்ஸ்

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தனது பிரச்சாரத்தின் போது இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை புனித நகரான ஜெருசலேமிற்கு மாற்றுவேன் எனக் கூறியிருந்தார். தற்போது அதிபராக பதவியேற்கும் நேரத்திலும் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் மார்க் ஐரால்ட், “டொனால்டு டிரம்ப்பின் இந்த முடிவு மோசமான விளைவுகளை உருவாக்கும். டிரம்பின் இந்த பிடிவாதமான முடிவை அவர் நிறைவேற்ற முடியாது என்பதை தெரிந்துகொள்வார் என நான் நம்புகிறேன்.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே ஏற்கனவே உள்ள பிரச்சனையைத் தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள உங்களால், இந்த பிரச்சினையில் பிடிவாதமாக ஒருதலைப்பட்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்றார்.

பாலஸ்தீனிடம் இருந்த ஜெருசலேம் நகரானது 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகர் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு புனித நகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.