YLS . ஹமீத் அவர்களே ,அகதி வாழ்வு உங்களுக்கு அரசியல் விளையாட்டாக தெரிகின்றதா?

இப்றாஹிம் மன்சூர்

 

 

 நேற்று 2017-01-15ம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் கலந்து கொண்டிருந்தார்.இவர் இந் நிகழ்விற்கு அமைச்சர் றிஷாதை இகழ்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்ததை இந் நிகழ்வை பார்க்கும் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.அவர் அந் நிகழ்வில் பேசிய பல விடயங்கள் இதற்கு முன்பு அவர் பல இடங்களில் பேசி எனது முகநூல் ஊடாக பதில் வழங்கப்பட்டிருந்ததால் அவைகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் வழங்கி எனது நேரத்தை வீண் விரயம் செய்ய விரும்பவில்லை.இருந்தாலும் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை இகழ்வதற்காக இனவாதிகளை நியாயப்படுத்தும் நிலைக்கு சென்றமை தான் மிகவும் கவலையான விடயம்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரி வில்பத்து வனத்தை விரிவாக்கி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துமாறு குறித்த விடயங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.இது சரியான கூற்று என வை.எல்.எஸ் ஹமீத் குறித்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

“வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழிக்கவில்லை என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.2012ம் ஆண்டு முஸ்லிம்கள் வாழ்ந்த சில பகுதிகள் வனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.வில்பத்து வனத்தை அண்டி முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் வர்த்தமானிப்படுத்தப்பட்டமையால் அவர் வில்பத்து வானத்தை விரிவாக்க கூறியது சட்ட ரீதியாக வனத்தையே சாரும்.இதற்கு குறித்த வர்த்தமானியை தடுக்காத அமைச்சர் றிஷாத்தே குற்றவாளி”

என்பதே அவரது வாதம்.அழகிய வாதம் என்பதில் சந்தேகமில்லை.இது நீதி மன்றம் போன்ற இடங்களில் விவாதிக்கப்படும் போதே இந்த வாதங்களை சரியென ஏற்பார்கள்.மனச் சாட்சியுள்ள மனிதர்களிடமல்ல.வை.எல்.எஸ் ஹமீத் நீங்கள்..?

வில்பத்துவை அழித்து முஸ்லிம்கள் குடியேறவில்லை என இலங்கை நாட்டில் வாழ்கின்ற அனைவரும் ஏற்பதாக இன்று நாட்டு நடப்பு அறிந்த யாராலும் ஏற்க முடியுமா?  இதற்கு முன்பு மூன்று மடங்கால் பெருகிய முஸ்லிம்  மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என இதே ஜனாதிபதி கூறியிருந்தார்.முஸ்லிம்கள் வில்பத்துவை அழித்து குடியேறியுள்ளார்கள் என இனவாதிகள் குதித்துக்கொண்டிருந்த போது வில்பத்து வனப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரி கட்டளை பிறப்பித்திருந்தார்.அமைச்சர் றிஷாத் வில்பத்துவை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுகின்றார் என  விகாரமாக தேவி பூங்கா முன்பு இனவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இப்படி அழிக்கின்றார்கள் என கூறியமைக்கு பல ஆதாரங்களை காட்டலாம். இதுவெல்லாம் வை.எல்.எஸ் ஹமீதிற்கு தெரியாதா? இப்படியான நிலையில் முதலில் வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறவில்லையென அனைவரும் ஏற்பதாக கூற முடியாது.

வில்பத்து தொடர்பான பிரச்சினை இலங்கையின் தேசிய பிரச்சினைகளில் ஒன்று.முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் வனமாக பிரகடனப்படுத்தப்பட்ட விடயம் பற்றி யாவரும் அறிந்ததே.இதனை நிச்சயம் ஜனாதிபதியும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.அவர் அறியவில்லை என்றால் அவர் நாட்டு நடப்பு தெரியாத ஜனாதிபதியாகவே இருப்பார்.அப்படியானவர் ஜனாதிபதியாக இருக்க எந்த தகுதியும் அற்றவர்.

குறித்த நிகழ்ச்சியில் ரங்கா,வை.எல்.எஸ் ஹமீத் ஆகிய இருவரும்  சிங்கள மொழியில் ஊடகங்களில் வெளிவருவது  மாத்திரம் தான் இன்றைய ஆட்சியாளர்களிடம் செல்கின்றது என்ற தோரணையில் பேசியிருந்தார்.இதுவே இவர்களின் சிறுமைத் தனங்களை அறிந்துகொள்ளச் செய்கிறது.பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை இன்றைய ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் புலனாய்வுத் துறையினர் தீவிர செயற்படுகின்றனர்,இதனை அறியாத நீங்கள் இன்று சமூகம் பற்றி கதைக்கின்றீர்கள்.

வில்பத்து விடயம்  தொடர்பில் அமைச்சர் றிஷாத்  தமிழ் மொழியில் மாத்திரம் கதைப்பதாக கூற முடியாது. அமைச்சர் றிஷாதோ சிங்கள தொலைக்காட்சிகளுக்கு இரு தடவை நேரடி விவாதத்திற்கு சென்றுள்ளார்.சில நாட்கள் முன்பு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் அவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள மொழி மூல விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.இதற்கெல்லாம் வை.எல் எஸ் என்ன சொல்லப் போகிறார்? எனவே,முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் வர்த்தமானிப்படுத்தப்பட்ட விடயத்தை நிச்சயம் ஜனாதிபதியை சென்றடைந்திருக்கும்.அதன் காரணமாக இதனை அறிந்து கொண்டு வில்பத்து வனத்தை விரிவாக்கி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தமாறு ஆலோசனை வழங்கியது மிகத் தவறாகும்.இதனை அமைச்சர் றிஷாதின் தலை மீது பழி போட ஜனாதிபதியின் கூற்றை நியாயப்படுத்தியுள்ளமை இனவாதிகள் பேரின மக்களிடத்தில் மாத்திரமல்ல முஸ்லிம்களிடத்திலும் வை.எல்.எஸ் ஹமீத்  வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கூறவே என் மனம் விரும்புகிறது.அகதி வாழ்வு உங்களுக்கு அரசியல் விளையாட்டாக தெரிகின்றதா?