வாழ்க்கை வண்டி

Mohamed Nizous

சின்ன வயசினிலே
CTB பஸ்ஸினிலே
இன்னல் பல பட்டு
இறுகி நிற்க கால் வலிக்கும்.

யாரு இறங்குவான்
எப்ப சீற் காலியாகும்
பார்த்துப் பார்த்தே
பக்கவாட்டில் கண் நோகும்.

பஸ் ஸ்லோ ஆக
பட படண்ணு பலர் இறங்க
உற்சாகம் பொங்க
ஓடிப் போய் உட்கார
வா மகன் இறங்குவம்
வாப்பா கூப்பிடுவார்.

கை பிடித்த கம்பியையும்
காற்றுத் தந்த ஜன்னலையும்
காலூன்றிய தரையையும்
காசு கொடுத்த டிக்கட்டையும்

விட்டு விட்டு மெல்ல
விரக்தியுடன் வெளியே
இறங்கிப் பார்த்தால்
ஸ்டாண்டு வந்திருக்கும்.
நெருங்கியதை நினைத்து
நெஞ்சம் நொந்திருக்கும்.

வாழ்க்கை வண்டியில்
வசதியான சீற் தேடி
ஓடி ஓடி உழைத்து
ஓரளவு வசதி வந்து
அனுபவிக்க உட்கார
அதிரடியாய் செய்தி வரும்

வாப்பாவுக்கு பதிலாக
வைத்தியர் இப்போ.

இற(ங்)க்கும் இடம் வந்திடுச்சு
இதுக்கு மேலே ஏலாண்ணு.
அறிக்கையை காட்டி
அறிவிப்பார் வைத்தியர்.

கை பிடித்த துணையயும்
காற்றுத் தந்த பூமியையும்
காலூன்றிய தொழிலையும்
காசு கொடுத்த பொருட்களையும்

விட்டு  விட்டு மெல்ல
விரக்தியுடன் வாழ்க்கையை
திரும்பிப் பார்த்தால்
தீர்ந்து போயிருக்கும்…!