ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமானால் நாட்டின் ஜனாதிபதியும் சபாநாயகருமே தீர்மானிக்க வேண்டும்:திகாம்பரம்

க.கிஷாந்தன்

இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 2 வருட காலப்பகுதியில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 2வது ஆண்டு பதவி பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 08.01.2017 அன்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2020ம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறாது. ஆனால் சிலர் ஆட்சி மாற்றம் இடம்பெறபோவதாக சொல்லி வருகின்றனர். ஆனால் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமானால் இந்த நாட்டின் ஜனாதிபதியும் பாராளுமன்ற சபாநாயகரும் தீர்மானிக்க வேண்டும். இதைவிடுத்து ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டு வந்தால் திகாம்பரத்தை இல்லாமல் ஆக்கலாம் என மலையகத்தில் பலர் கனவு காண்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 08.01.2017 அன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. அன்று அவர் ஆட்சிக்கு வரவில்லை என்றால் மலையகத்தில் உள்ள தலைவர்கள் என்னை என்ன செய்திருப்பார்கள். ஆனால் முன்னால் ஜனாதிபதி ஒன்றும் செய்திருக்க மாட்டார்.

மலையகத்தின் தலைவர்கள் எனக்கு என்னை செய்திருப்பார்கள் என உணர முடியும். மலையகத்தின் அபிவிருத்தி என்னிடத்திலேயே தங்கியுள்ளது. வெறுமனே எவரும் அபிவிருத்தி என்று பூச்சாண்டி காட்ட தேவையில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன்.

மலையகத்தில் அபிவிருத்தி நானே செய்ய வேண்டும். ஒரு காலத்தில் எதை செய்தாலும் காங்கிரஸ் தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அனைத்தையும் திகா தான் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

அமரர்.சந்திரசேகரனின் கனவு இன்று நனவாக்கப்பட்டு வருகின்றது. அவரின் அரசியல் பாசறையில் அரசியலை கற்றவன் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

மலையகத்தில் அரசியல்வாதிகளுடத்தில் ஒற்றுமை அற்ற நிலையில் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாக செயற்படுகின்றது. சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் மக்களின் சேவைகள் நிமிர்தம் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்.

2017ம் ஆண்டு அட்டன் நகரம் அபிவிருத்தி அடைந்த மாநகரமாக தோற்றமளிக்கும். 200 வருடங்கள் ரயில் நிலையத்தை மறைத்திருந்த தகரத்தை அகற்ற முடியாத தலைவர்கள் இன்று அபிவிருத்தி தொடர்பில் பொய்யுரைக்கின்றார்கள்.

அதனை அகற்றி பெரிய கடை தொகுதிகளையும் பிரதான வீதியையும் அபிவிருத்தி செய்ய வேலைகள் நடைபெற்று வருகின்றது.

மலையகத்தில் ஆட்டம் போட்டவர்கள் இன்று அடங்கிவிட்டார்கள். எனக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளேன்.

ஆகையால் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றது. ஆனால் கறுப்பு கண்ணாடிகளை மாற்றிச் செல்லும் தலைவர்களுக்கு இருட்டாக தெரிகின்றது.

கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தால் திகாம்பரத்தின் அபிவிருத்தி வேலை திட்டங்கள் தெரியும்.

மக்களுக்கு இங்குள்ள பிரச்சினை பொருளாதார பிரச்சினையாகும். அத்தோடு வேலை வாய்ப்பும் வீட்டு பிரச்சினையும் அதிகமாக காணப்படுகின்றது. 2020ல் ஓரளவு தீர்வினை இதற்கு காணமுடியும்.

இன்னும் 4 வருடங்கள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நாட்டை கொண்டு செல்ல மக்கள் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் கடனில் இருக்கும் நாட்டை காப்பாற்றி புதிய மாற்றத்தினை காணமுடியும் என தனது உரையில் முலம் தெரிவித்தார்.