சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள…,

நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

அந்தப் பழங்கள்…

செர்ரி: செர்ரி பழத்தில் பைட்டோகெமிக் கல்கள் மற்றும் கொழுப்பு ஏறாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பான சிறுநீரக வீக்கம் ஏற் படாமல் இது தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. இப்பழம் சிவப்பு நிறமாக இருக்க காரணம், ‘ஆந்தோசயனின்’ என்ற வேதிப்பொருள்தான். இது உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதுடன், சிறுநீரகத்தில் விஷத்தன்மை ஏற்படாமலும் காக்கிறது.

ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

சிவப்புத் திராட்சை: இப்பழத்தில் பிளேவனாய்டு என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நைட்ரிக் ஆக்சைடு, உடலில் உள்ள தசைகளின் ரத்த ஓட்டத்தையும் சிறுநீரக ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கிறது.

தர்ப்பூசணி: தர்ப் பூசணி பழத்தில் பொதுவாகவே நீர் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதைச் சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சினை இல்லாமல் கழியும். ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

பப்பாளி: இப்பழத்தில், உடலுக்கு வலுச் சேர்க்கும் சத்துகளும், பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நன்மை பயக்கும்.

கிரான்பெர்ரி: ‘குருதிநெல்லி’ என்று தமிழில் குறிப்பிடப்படும் ‘கிரான்பெர்ரி’ பழத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுவியாதியை தடுக்கும் சிறப்புத் தன்மை உள்ளது. அதோடு இப்பழம், இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.