ஜனாதிபதியும் பிரதமரும் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் – அசாத் சாலி

 

சுஐப் எம் காசிம்

 

வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர்.

வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக  இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புகள் குறித்தும் விளக்கும் செய்தியாளர் மாநாடு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான ஏ எச் எம் பௌசி, ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம் எச் எம் நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷத், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றனர்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இங்கு கூறியதாவது,

முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினையை அரசாங்கம் ஒரு சமூகத்தின் பிரச்சினையாகவோ, அல்லது ஒரு சாராரின் பிரச்சினையாகவோ கருதாமல் தேசியப் பிரச்சினையாக பார்க்க வேண்டும், இந்த விடயங்களில் அரசுக்கே நிறையப் பொறுப்புகள் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் ஈழம் கேட்கவில்லை எங்களை, எங்களது சொந்த இடங்களில் நிம்மதியாக வாழவிடுங்கள். 

’ஒட்டாரா குணவர்த்தன” போன்றவர்கள் எவருடைய பின்புலத்தில் செயற்படுகின்றார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் தெளிவாக விளங்குகின்றது. வில்பத்துப் பிரச்சினையில் மூக்கை நுழைத்துள்ள டலஸ், உதய கம்மன்பில போன்றவர்கள் அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார்கள் என்பது அவர்களது இனவாதக் கருத்துகளிலிருந்து புலப்படுகின்றது. 

ஜனாதிபதியும் பிரதமரும் ஓரிடத்திலிருந்து அமர்ந்து பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும். தற்போது பொது பல சேனாவும் மகிந்த அரசின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் மாறி மாறி வெளியிடும் கருத்துக்கள் எங்கள் சமூகத்தை அவர்கள் எப்படி பந்தாடியிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்குப் போதுமானது.