மு.காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது

 

   மு .காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது. பல வேளை பலரை முடிச்சுப் போடும் இத்தேசியப் பட்டியல் பலரை முட்டியும் போட வைத்திருக்கின்றது. மு காவின் தலமை தேசியப்பட்டியலை வைத்து தொட்டிலை ஆட்டுவதும் நான்றாக தூங்கிய பின்னர் பால்போத்தலை கழற்றி விடுவதும் என நிலமை சென்று கொண்டிருப்பது வாடிக்கை. கடந்த பல தடவைகளில் மு கா தலமை அட்டாளைச்சேனைக்கு தேசிப்பட்டியல் வழங்குவதன் ஊடாக பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொடுத்து அம்மக்களின் அரசியலுக்கும் ஒரு வரலாற்றை பெற்றுக்கொடுப்பது என வாக்களித்து வந்துள்ளது. அம்மக்களும் இந்த வாக்கில் சுற்றி சுழன்று சுருண்டும் உள்ளனர்.

 

  இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அத்தகைய வாக்குறுதி வழங்கப்பட்டது என்பதுடன் அதன் கணக்கை செலுத்த வேண்டிய கடன் மு கா தலமைக்கு உள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த கணக்கை செலுத்த வேண்டிய பொறுப்பு மு கா தலமையை சாரும். அதற்கான அத்தனை விலைகளையும் ஏற்க வேண்டியதும் கொடுக்க வேண்டியதும் மு கா தலமைதான். மு காவிடம் இரண்டு தேசியப்பட்டியல்கள் உண்டு. ஒன்று திருக்கோணமலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற தெளபீக் அவர்களுக்கு ஏற்கனவே மு கா தலமையினால் (முன் வாக்குறுதி ஏதுமின்றியே) வழங்கப்பட்டுவிட்டது. தற்போது எஞ்சியிருக்கின்றதும் மு காவின் செயலாளர் நாயகத்திற்கு விரைவில் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் உறுதிப்படுகின்றன. இத்தனை நாட்களின் பின்னர் இந்த தேசிய பட்டியலை ஹசன் அலி அவர்களுக்கு வழங்க தீர்மானித்த்தும் மு கா தலமைதான். குறித்த தேசியப் பட்டியலை தன் கட்டுப்பாட்டில் இதுகாலவரை வைத்திருப்பதும் மு கா தலமைதான்.

 

  அட்டளைச் சேனை மக்களுக்கு வாக்களித்தபடி தேசியப்பட்டியலை உறுதிப்படுத்த வேண்டியது மு கா தலமை. வாக்கின் படியாக அதனை கேட்டு பெறும் உரிமையும் அருகதையும் அட்டாளைச்சேனை மக்களுக்கு உண்டு. இதற்காக, ஹசன் அலி அவர்கள்தான் அதனை தட்டிப் பறித்துவிட்டார் என யாரேனும் கூறுவது நியாயமற்றது. ஏனெனில் சுமார் ஒன்றரை வருடங்கள் அதனை மு கா தலைவர்தான் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தார். எனவே திருக்கோணமலை தெளபீக் அவரினால் மு கா தலமையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தேசியப்பட்டியலை நெருங்க முடிந்த வேகத்தில் ஹசன் அலி அவர்களினால் மற்றய தேசியப்பட்டியலை நெருங்க முடியாமல் இருந்த்து. இதனால் ஹசன் அலி என்பவர் கட்சிக்குள் பலயீனமானர், தெளபீக் பலம்படைத்தவர் என்பதல்ல பொருள்.

 

  முகா தலமை எதையோ அம்பாறை மக்களிடமிருந்து அபகரிக்க திட்டமிட்டிருந்த்து என்பதே யதார்த்தம். மீண்டும் ஒன்றரை வருடங்களின் பின்னர் அதனை மு கா தலமைதான் தற்போது செயலாளர் நாயகத்திற்கு வழங்கவும் பிரயாசைப்படுகின்றார். எனவே அட்டளைச்சேனைக்கு தேசிப்பட்டியல் கிடைப்பதற்கு ஹசன் அலி அவர்கள் தடை என்பதனை ஏற்க வேண்டுமாயின் திருக்கோணமலை தெளபீக் அவரையும்தான் அதே காரணத்திற்காக வசைபாட வேண்டும். ஏனெனில் மு கா தலைவர் தம்மிடம் இருக்கின்ற இரண்டு காணிவல் ஐஸ் குச்சிகளில் ஒன்றை தெளபிக்கிடம் கொடுத்து வைத்திருக்கிறார் மற்றயதை தற்போது ஹசன் அலிக்கு அவரே வழங்கயிருக்கின்றார்.

 

 எனவே, அட்டாளைச் சேனை மக்கள் இதுவரையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், அதனை மு கா தலமைக்கு அனுப்புவதும், அவற்றை ஊடகங்களில் வெளிப்படுத்தி தம் ஊர் மக்களை கிளுகிளுக்க வைப்பதனை விட்டுவிட்டு அரத்தமுள்ள அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். மு கா தலமை தான் வழங்கிய வாக்குறுதியை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எப்போதும் நிறைவேற்ற முடியவில்லை எனில், குறித்த அட்டாளைச்சேனை மக்களின் அபிலாசைகளுக்கு இதுகால வரைக்கும் மதிப்பளிக்க முடியவில்லை எனில் அத்தலமைக்கும் மக்களுக்கும் மத்தியில் காணப்படும் இடைவெளியின் அளவை அம்மக்கள் அரசியலில் எடைபோட தெரிந்திருக்க வேண்டும். இதனை அட்டாளைச்சேனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

சக்கி இஸ்மாயில்