அல்ஹம்துலில்லாஹ் , காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் மாலைதீவில்

அஸ்லம் .எஸ்.மௌலானா
 
 
இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
 
 
இவர்கள் தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் இம்மீனவர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை காலை தமது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
 
 
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இப்படகுகள் இரண்டும் வழமைக்கு மாறாக திசை மாறிச்சென்று மாலைதீவு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த நிலையில் அவற்றில் இருந்த எரிபொருள் தீர்ந்து போய் விட்டதாகவும் இதன் காரணமாக கடற்காற்றினால் இரு படகுகளும் நகர்ந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியால் வந்து கொண்டிருந்த மாலைதீவு கடற்படையினரின் பார்வையில் ஒரு படகு தென்பட்டதாகவும் அவர்கள்  அப்படகை மாலைதீவு துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
இப்படகில் மூன்று மீனவர்கள் சென்ற போதிலும் நடுக்கடலுக்கு அப்பால் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மற்றைய படகிலுள்ள மீனவர்களுக்கு உதவுவதற்காக அப்துல் வாஹித் எனும் மீனவர் அதில் ஏறியதாகவும் பின்னர் அப்படகு வேறு திசை நோக்கி  நகர்ந்து சென்று விட்டதாகவும் மீட்கப்பட்ட படகில் இருந்த இரு மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.
 
 
ஏ.பி.ஹாஜா முஹைதீன், எம்.எம்.அர்ஜில் ஆகிய இருவருமே மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மீனவர்களாவர்.
 
 
அதேவேளை கே.எம்.நஸீருத்தீன், ஏ.எம்.அலாவுதீன், எம்.எம்.வாஹிதீன், அப்துல் வாஹித் ஆகிய நான்கு மீனவர்களும் மற்றொரு படகில் உயிருடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும் காப்பாற்றப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.