பொண்டாட்டிக்கு ஆம்புள MPயும் புருஷனுக்குப் பொம்புள MPயும் கேட்கும் காலம் வருமோ தெரியாது

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் இன்று வேசிகள் வீட்டு விவகாரமாகம் போல் மாறிவிட்டது. இரண்டு தேசியப் பட்டியல் எம்.பிக்கள் என்ற இந்த விவகாரம் ஊரையும் கட்சியையும் இரண்டாக உடைத்து விடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது 
கட்சியை வெளியிருந்து விமர்சிப்போரும் கட்சிக்கு எதிராகச் சதி செய்வோரும் வெளியில் பெரிதாக இல்லை உள்ளேதான் அனைவரும் உள்ளனர் என்பதனை நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், எழுந்துள்ள விமர்சனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கட்சி மட்டத்திலும் வெளியிலும்ம் சிலரால் “ஹக்கீம் ஒரு சர்வாதிகாரி” என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைக்கு அவர் சரியான தீர்வை என்றோ கண்டிருக்க முடியும். ஆனால், அவரது விட்டுக் கொடுப்பு, மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கும் தன்மைகளே இன்று அவரை இந்த விடயத்தில் பலரும் பலவீனமாக நோக்குவதற்கு காரணமாகி விட்டன. இதனாலே இந்த தேசியப் பட்டியல் என்ற சிறிய விவகாரம் இன்று தேசிய முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகிறது.

அன்று ஹஸன் அலிக்கு தேசியப் பட்டியல் வழங்குங்கள் என்று கூறியவர்களில் பலர் இன்று அட்டாளைச்சேனைக்கே எம்..பி பதவி கொடுக்க வேண்டுமென கூறுவதன் மூலம் அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பது உண்மைதான். ஆனால் தலைமைக்கு சங்கடமான நிலைமைகளை எவரும் தோற்றுவிக்கக் கூடாது என்பதே எனது கருத்து. அது எந்தக் கட்சி என்றாலும் சரிதான். அதே போன்று இன்றுள்ள நவீன அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கியிருக்கவும் கூடாது.

தலைமை வாக்குறுதியளித்தபடி எம்.பி பதவி வழங்க வேண்டுமென மக்கள்தான் கேட்கிறார்கள் என்றாலும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த வேண்டியவர்களே எரியும் நெரிப்பில் எண்ணெய்யை ஊற்ற முயற்சிப்பது அவர்கள் காணும் அரசியல் கனவுலக காட்சிகளின் வெள்ளோட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

தேசியப்பட்டியல் விவகாரத்தை மக்கள் இன்று பெரிதாக தூக்கிப் பிடிக்காவிட்டாலும் மக்களைத் தூண்டி விட்டு, இந்த விடயத்தை பூதாகரப்படுத்தும் கட்சி முக்கியஸ்தர்களே முஸ்லிம் காங்கிரஸுக்குள் அதிகம் என்றும் கூறலாம்.

தங்களது சுயநல அரசியலை மையப்படுத்தி மக்களைத் தூண்டி அதிகாரத்துக்கு வர முயற்சிப்போர் இன்று கட்சியை இரண்டாக உடைத்து மக்கள் செல்வாக்கையும் இழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். பிரதேச வாதத்தை தூண்டி பிளவுகளுக்கு சுழி் போடுகின்றனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 3 எம்.பிக்கள் உள்ள நிலையில் அவர்களில் இருவர் பிரதியமைச்சர்களாவர் இந்த மூவருமே செயற்றிறன் இல்லாத பொம்மை அரசியல்வாதிகளாக இன்று காட்சியளிக்கும் நிலையில் இன்னும் இரண்டு எம்பிக்களா? மக்களுக்கு என்ன இதனால் இலாபம்? 

கடந்த காலங்களில் (1994 களுக்கு முன்னர்) குறைந்த எண்ணிக்கையிலான எம்பிக்களை பல கட்சிகளிலும் கொண்டு காணப்பட்ட அம்பாறை மாவட்டம் அடைந்த வளர்ச்சியையும் இன்று சந்தையில் மலிந்த கீரி மீன்கள் போன்று ஒரே கட்சியில் மலிந்த விட்ட எம்பிக்களின் அபிவிருத்தி பணிகளையும் ஒப்பிட்டு நோக்கும் போது உண்மைகள் புலப்படும். யார் மக்களுக்கான ஹீரொக்கள்? எவரெவார் வெறும் ஸீரோக்கள் என்பது தெரிய வரும்ஃ

1. கல்முனைக்கு ஒரு எம்.பி
2. சம்மாந்துறைக்கு ஒரு எம்.பி
3. நிந்தவூருக்கு இரு எம்பிக்கள்
4. அட்டாளைச்சேனைக்கு ஒரு எம்பி. 

என்னடா அநியாயம் இது? ஒரே கட்சியில் ஒரு மாவட்டத்துக்கு 5 எம்பிக்களா? இந்த தம்பிக்களால் மக்களுக்கு என்னதான் விமோசனமோ தெரியாது.

இன்று ஊருக்கு ஒரு எம்.பி… நாளை தெருவுக்கு ஒரு எம்.பி…. நாளை மறுநாள் வீட்டில் பொண்டாட்டிக்கு ஓர் ஆம்புள எம்.பியையும் புருஷனுக்கு ஒரு பொம்புள எம்.பியையும் கேட்கும் காலம் வருமோ தெரியாது. 

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்