கல்முனை மீனவர்கள் 6 பேருடன் கடலுக்கு சென்ற 2 படகுகள் மாயம்!

அஸ்லம் எஸ்.மௌலானா,முஹம்மட் றின்ஸாத்
கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகுகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி கபீர் ஹாஜியார் என்பவருக்கு சொந்தமான இவ்விரு படகுகளிலும் தலா மூன்று மீனவர்கள் வீதம் அப்துல் வாஹித், ஏ.பி.ஹாஜா முஹைதீன், எம்.எம்.அர்ஜில், கே.எம்.நஸீருத்தீன், ஏ.எம்.அலாவுதீன், எம்.எம்.வாஹிதீன் ஆகியோரே தொழில் நிமித்தம் கடலுக்கு சென்றிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இப்படகுகள் இரண்டும், பத்து நாட்கள் கடந்தும் இன்னும் கரை திரும்பவில்லை என இப்படகுகளின் உரிமையாளரான கபீர் ஹாஜியார் தெரிவித்தார்.
மீன்பிடிக்காக ஆழ்கடலுக்கு செல்கின்ற தமது படகுகள் ஐந்து அல்லது ஆறு நாட்களில் கரை திரும்புவதே வழக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கடற்படைத்  தளபதியிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இப்படகுகளைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் கண்காணிப்பில் இருக்குமாறு தனது இணைப்பு செயலாளரான ரஹ்மத் மன்சூருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அவர் எம்முடன் தொடர்பில் இருந்து கொண்டு ஒத்துழைப்பதாகவும் கபீர் ஹாஜியார் குறிப்பிட்டார். 
இப்படகுகள் கரை திரும்பாததனால் இம்மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடன் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.