வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையில் மாற்றம் : நிதி அமைச்சர்

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

குறித்த யோசனையில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு வாகன சாரதிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்த விடயம் குறித்து தமது கவலையையும் வெளியிட்டிருந்தனர்.

இதன்போது, இவர்களிடம் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, வாகன சாரதிகளுடன் கலந்துரையாடாமல் அபராதத் தொகையை அதிகரிக்கப்போவதில்லை எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.