அமெரிக்காவைப் போன்று ரஷியாவும் பதிலுக்குப் பதில் பழிவாங்காது: ரஷியா அதிபர் புதின்

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆனால் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி மற்றும் அதன் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை திருடியது. அதன் மூலம் ஹிலாரி மீது தவறான தகவல்களை ரஷியா பரப்பி டிரம்பை வெற்றி பெற செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதை தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரிந்த ரஷிய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 35 பேரை அதிபர் ஒபாமா வெளியேற்றினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் அதிபர் புதினுக்கு ஆலோசனை வழங்கியது.

அதை அதிபர் புதின் நிராகரித்து விட்டார்.  அமெரிக்காவை போன்று ரஷியாவும் பதிலுக்கு பதில் பழிவாங்காது என அறிவித்துள்ளார். அதன் படி ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படமாட்டார்கள் என்றார்.

புதினின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையில் விளாடிமிர் புதினின் இத்தகைய நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது. அவர் எப்போதும் ‘ஸ்மார்ட்’ ஆன மனிதர் என்பது எனக்கு தெரியும் என்றார்.

மேலும் கூறும் போது இ-மெயில் திருட்டு விவகாரம் குறித்து அடுத்த வாரம் அமெரிக்க உளவுத்துறை தலைவர்களை சந்தித்து பேசுவேன். அப்போது உண்மை நிலை தெரியவரும் என்றார்.