மறைந்த முன்னாள் பிரதமருக்காக அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க தினம் ரத்து : அமைச்சர் தெரிவிப்பு

தேசிய துக்க தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவிற்காக அரசாங்கம் எதிர்வரும் 30 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தது.

எனினும் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேசிய துக்கதினத்தை ரத்து செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என இன்று காலை அமைச்சர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

பின்னர் மீளவும் துக்க தினம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது, அமரர் ரட்னசிறியின் உறவினர்களது கோரிக்கைக்கு அமைய தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.