சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது

Chennai-Super-Kings-vs-Delhi-Daredevils-Scorecard-14-May-IPL-2013

 

ஐபிஎல் டி20 தொடரின் 8வது சீசனில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று  டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்துள்ள 7 சீசனிலும், சென்னை அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளதுடன் தொடர்ந்து 4 முறை இறுதிப்  போட்டியில் விளையாடி 2 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையால் சிஎஸ்கே வீரர்கள்  மனரீதியாக சற்று நெருக்கடியை சந்தித்திருந்தாலும், கேப்டன் டோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் பிளெமிங்கின் வழிகாட்டுதலுடன் உற்சாகமும்  உத்வேகமும் பெற்றுள்ளனர். மூன்று ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் சிஎஸ்கே, இம்முறை பட்டம் வெல்லும்  முனைப்புடன் களமிறங்குகிறது.

உலக கோப்பையில் அதிரடி காட்டிய நியூசி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீசின் டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ரெய்னா,  ஹஸி, ஜடேஜா, டோனி என்று பலமான பேட்டிங் வரிசை எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். மேட் ஹென்றி, மோகித் வேகமும்  அஷ்வின், ஜடேஜா சுழலும் பந்துவீச்சு தாக்குதலுக்கு வலு சேர்க்கிறது. சிஎஸ்கே வீரர்களின் துடிப்பான பீல்டிங்கும், உள்ளூர் ரசிகர்களின் அமோக  ஆதரவும் அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், ஜீன் பால் டுமினி தலைமையில் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள  டெல்லி டேர்டெவில்ஸ் அணி எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் (33 வயது) அந்த அணியின்  நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். 2011 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும்  நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வுக் குழுவினரால் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஜாகீர் கான், முகமது ஷமி வேகமும், இம்ரான் தாஹிர் சுழலும் சென்னை வீரர்களுக்கு சவாலாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றியுடன் கணக்கை  தொடங்கும் உறுதியுடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.