அமைச்சர் றிஷாதை விசாரணைக்கு அழைப்பதால் அவர் ஒரு போதும் குற்றவாளியாகப் போவதில்லை!!

 

இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா

அரசியல் வாதிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதொன்றும் புதிதல்ல.தனது அரசியலுக்கு யாராவது ஒருவர் சவாலாக வருவாரென நினைக்கும் போது அவர் மீது ஏதாவதொன்றை கூறி அவரது மதிப்பை இல்லாதொழிப்பது அரசியலில் சாதாரணமாக இடம்பெறும் விடயங்களாகும்.அமைச்சர் றிஷாதிடம் ஏனைய அரசியல் வாதிகளிடம் அதிகமாக இருப்பது போன்று மது,மாது போன்ற குற்றச் சாட்டுக்கள் சிறிதளவுமில்லை.அவர் மீது ஊழல் குற்றச் சாட்டே பிரதானமாக முன் வைக்கப்படுகிறது.

அமைச்சர் றிஷாத் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் உள்ளதாக கூறப்படுகின்ற போதும் இது வரை யாராலும் சிறிதளவும் நிரூபிக்க முடியவில்லை.இவரை ஊழல் வாதியென நிரூபிப்பதில் மு.காவினர் பலர் நேரடியாக களத்தில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்சா ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தியே அமைச்சர் றிஷாதின் மீது சேறு பூசும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் வைத்து அமைச்சர் றிஷாத் மீது பகிரங்கமாகவே ஊழல் குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.இப்படி அமைச்சர் ஹக்கீம் எச் சர்ந்தர்ப்பத்திலும் நடக்காமை குறிப்பிடத்தக்கது.இன்னும் சிலர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.இப்படி இருந்தும் அமைச்சர் றிஷாத் எச் சந்தர்ப்பத்தில் எதிலும் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்படவில்லை.

இக் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கும் அமைச்சர் ஹக்கீம் சட்ட முதுமானியாவார்.ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி அமைச்சர் றிஷாதின் ஊழல்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க புறப்பட்ட வட மேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஸா ஒரு சட்டத்தரணியாவார்.மு.காவினுள் இன்னும் எத்தனையோ புலமைமிக்க சட்டத்தரணிகள் நிறைவாகவே இருக்கின்றனர்.இவர்களாலேயே அமைச்சர் றிஷாதை ஊழல்வாதியென நிரூபிக்க முடியவில்லை என்றால் அது புனையப்பட்ட குற்றச் சாட்டு என்பதை சிறு பிள்ளையும் அறிந்து கொள்ளும்.

அமைச்சர் றிஷாத் FCID இற்கு அழைக்கப்பட்ட விடயத்தை வைத்து சிலர் அமைச்சர் றிஷாதின் மீது களங்கத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.ஒருவரை விசாரணைக்கு அழைப்பதால் அவர் ஒரு போதும் குற்றவாளியாகப் போவதில்லை.ஒரு தடவை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நல்லாட்சி அரசு ஊழல் செய்ததாக பாரபட்சமின்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக அமைச்சர் றிஷாதை விசாரித்திருந்தமையை ஆதாரம் காட்டியுமிருந்தார்.அமைச்சர் றிஷாதை FCID விசாரணை செய்ததை யாரும் மறுக்கவில்லை.விசாரணை செய்பவர்கள் எல்லாம் குற்றவாளிகளல்ல.விசாரணை என்பது சந்தேகத்தின் பேரில் இடம்பெறும் ஒன்றாகும்.ஊழல் குற்றச்சாட்டுக்கள் மு.காவின் ஸ்தாபாகத் தலைவர் மர்ஹூம் அஷ்றபையும் விட்டு வைக்கவில்லை.அவருக்கு அமெரிக்காவில் அப்பில் தோட்டம் இருக்கிறதென்றார்கள்.தற்போது அப்பில் தோட்டத்தின் அட்ரசையும் காணவில்லை.மர்ஹூம் அஷ்ரப் ஊழல் செய்ததற்கு அவரது கையை வெட்ட வேண்டுமென பாராளுமன்றத்திலும் ஒலித்திருந்தன.அவர் மரணித்த பிறகு அப்படி எதனையும் காண முடியவில்லை.

இலங்கை அரசியலமைப்பு

12 (5) ஆள் ஒவ்வொருவரும் அவர் குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை,சுத்தவாளியென ஊகிக்கப்படல் வேண்டும்.

எனக் கூறுகிறது.இலங்கை அரசியலமைப்பின் படி விசாரணை செய்யப்பட்ட ஒருவரை ஒரு போதும் யாராலும் குற்றவாளியாக கூற முடியாது.அப்படி யாராவது கூறுவாராக இருந்தால் அது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

ஒருவர் இன்னுமொருவரை குற்றம் சாட்டி அதனை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர்களிடமுள்ள ஆதாரங்கள் செல்லுபடியற்றதாகும்.அமைச்சர் றிஷாதை குற்றம் சாட்டுபவர்களில் அதிகமானவர்கள் சிறந்த புலமைமிக்கவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு முஸ்லிம் தனது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.ஒருவர் மீது குற்றம் சாட்டுவதென்றால் தகுந்த ஆதாரங்கள் முன் வைக்கப்பட வேண்டும்.அந்த தெளிவான ஆதாரத்தின் முக்கியத்துவத்தை கீழ் உள்ள ஹதீத் மூலம் அறிந்துகொள்ளலாம்.

2671.இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.ஹிலால் இப்னு உமையா (ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார்.நபி (ஸல்) அவர்கள்,“ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததுக்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்” என்று கூறினார்கள்.அதற்கு அவர்கள்,”இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர்,தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?” என்று கேட்க,நபி (ஸல்) அவர்கள்,”நபி (ஸல்) அவர்கள் “ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள்.(சஹீஹுல் புகாரி)

தன் மனைவியின் மேல் ஒரு மனிதரை பார்த்ததையே ஆதாரமின்றி கூறினால் அதற்கு கசையடி வழங்கப்பட வேண்டும் என்றால் இன்று அமைச்சர் றிஷாத் பற்றி வாய்க்கு வந்த வந்ததையெல்லாம் கூறித் திரியும் போராளிகளுக்கு இஸ்லாத்தின் தண்டனை எதுவாகவிருக்கும்? யாராக இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.அரசியலுக்காக புறம் பேசி மனிதனின் மாமிசத்தை சாப்பிட்டு மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்குள் அகப்பட்டுக்கொள்ளாதீர்கள்.